“பரப்புரை முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வு எடுக்கலாம்” - மோடி பேச்சு

“பரப்புரை முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வு எடுக்கலாம்” - மோடி பேச்சு
“பரப்புரை முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வு எடுக்கலாம்” - மோடி பேச்சு

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட பரப்புரை சற்று நேரத்தில் முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது பேசிய அமித் ஷா, “2014 ஆம் ஆண்டு பாஜகவுக்கு தனிபெரும்பான்மை வெற்றியை மக்கள் அளித்தார்கள். 5 வருடங்களில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றியிருக்கிறோம். மோடி அரசு மீண்டும் அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்காக வரலாற்றில் இல்லாத அளவுக்கு பாஜக பரப்புரை மேற்கொண்டது. 133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் மோடி அரசு கொண்டு வந்துள்ளது. ஏழைகள், பெண்கள், விவசாயிகளுக்கு மோடி அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. 

வீட்டுவசதி, மின்சாரம், சமையல் எரிவாயு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடைக்கோடி மக்களுக்கும் கிடைத்துள்ளது. மோடியின் அரசில் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக உணர்கின்றனர். அரசை சுமூகமாக நடத்துவதில்தான் நாங்கள் கவனம் செலுத்தினோம். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற அலை நாடு முழுவதும் வீசுகிறது. மேற்கு வங்கத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் வன்முறை நடக்கவில்லை. மேற்கு வங்கத்தில் வன்முறைக்கு மம்தா ஆட்சியே காரணம். கோட்சே குறித்து பேசியதற்காக சாத்வி பிரக்யா உள்ளிட்ட 3 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அவர் பதிலளித்த பின் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு, நடவடிக்கை எடுக்கும்.” எனத் தெரிவித்தார். 

இதையடுத்து பேசிய மோடி, “ பரப்புரை முடிந்துவிட்டதால் நான் சற்று இளைப்பாறலாம். இது ஜனநாயகத்தை கொண்டாட வேண்டிய தருணம். தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி. இந்தத் தேர்தல் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு விரைவில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இந்தத் தேர்தல் பரப்புரையில் என்னுடைய ஒரு கூட்டம் கூட ரத்து செய்யப்படவில்லை. 

மீண்டும் நாட்டை ஆள்வதற்கு பாஜகவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். மக்கள் ஏகோபித்த ஆதரவு 
இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. 2014 ஆம் ஆண்டு தேர்தலை விட இந்தத் தேர்தல் பரப்புரை பெரிய அளவில் இருந்தது. நாட்டின் பல பகுதிகளுக்கு சென்றபோது 5 ஆண்டு ஆட்சிக்கு நன்றி சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. நாட்டின் நிர்வாக நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம். பாஜகவுக்கு வாக்களிக்க மக்கள் மனதளவில் தயாராக இருந்தனர்” எனத் தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com