ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் 2019 ஆம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக் மற்றும் அதிகமாக பேசப்பட்ட பிரபலங்களை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.
ட்விட்டரில் 2019 ஆம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட நபர், அதிகம் பகிரப்பட்ட பதிவு, ட்ரெண்டான ஹேஷ்டேக்களில் டாப் 10 பட்டியல் பற்றிய விவரங்களை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. இதில் அதிகம் பேசப்பட்ட அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தையும் ராகுல்காந்தி 2 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். மத்திய அமைச்சர் அமித்ஷா மூன்றாவது இடத்திலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
மேலும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் 8 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இதேபோல் அதிகம் பேசப்பட்ட பெண் அரசியல் தலைவர்களில் ஸ்மிருதி இராணி முதலிடத்திலும், பிரியங்கா காந்தி 2 ஆம் இடத்திலும் உள்ளனர். மூன்றாவது இடத்தில் சுஷ்மா ஸ்வராஜும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 5ஆம் இடத்திலும் உள்ளார். இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
பொழுதுபோக்கு பிரிவில், நடிகர் அமிதா பச்சன் முதல் இடத்திலும், விஜய் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். பொழுதுபோக்கு பிரிவில் பெண்களின் பட்டியலில் முதல் இடத்தில் சோனாக்ஷி சின்ஹாவும், அனுஷ்கா சர்மா இரண்டாவது இடத்திலும் பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நான்காம் இடத்திலும் இருக்கின்றனர்.
விளையாட்டுதுறையில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஆண்கள் பிரிவில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். மகேந்திர சிங் தோனி இரண்டாம் இடத்திலும் உள்ளார். பெண்களில் முதலிடத்தில் பிவி. சிந்துவும், மேரிகோம் 6 ஆவது இடத்திலும் உள்ளனர். இத்துடன் 2019 ஆம் ஆண்டில் அதிகம் பகிரப்பட்ட எமோஜிகளையும் ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் சிரிப்பை குறிக்கும் எமோஜியை அதிகம் பேர் பயன்படுத்தி உள்ளனர்.
2019ஆம் ஆண்டு அதிகமாக டிரெண்டான ஹேஷ்டேக் பட்டியலில் #LokSabhaelections2019 முதல் இடத்திலும், #Chandrayaan 2 இரண்டாவது இடத்திலும் உள்ளது. ‘பிகில்’ படம் குறித்து நடிகர் விஜய் பதிவிட்ட ட்வீடே, இந்த ஆண்டு அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டர் அறவிக்கப்பட்டுள்ளது.

