எம்.எல்.ஏ.க்களை விட அதிக நாட்கள் பணி செய்வது எம்பிக்கள் - ஆய்வில் தகவல்
எம்.எல்.ஏ.க்களை ஒப்பிடுகையில் எம்பிக்களே அதிக நாட்கள் பணியில் இருப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை அனைத்து மாநிலங்களில் நடந்த பேரவைக் கூட்டங்கள் மற்றும் நாடாளுமன்றக் கூட்டங்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. இதன்படி ஓராண்டில் நாடு முழுவதும் உள்ள பேரவைகளில் சராசரியாக கூட்டம் நடக்கும் நாட்களின் எண்ணிக்கை 28. அதுவே நாடாளுமன்ற மக்களவை நடக்கும் நாட்களின் எண்ணிக்கை 70, மாநிலங்களவை செயல்படும் நாட்களின் எண்ணிக்கை 69.
ஆய்வின் படி கேரளா மற்றும் கர்நாடகாவில் 46 நாட்களும், மகாராஷ்டிராவில் 45 நாட்களும், ஒடிசாவில் 42 நாட்களும், ஜம்மு காஷ்மீரில் 39 நாட்களும் பேரவைக்கூட்டங்கள் நடந்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 38 நாட்கள் பேரவைக்கூட்டங்கள் நடந்துள்ளன.
குறைந்தபட்சமாக நாகலாந்தில் 10 நாட்களும், டெல்லியில் 13 நாட்களும், சிக்கிம்மில் 14 நாட்களும், மேகலாவில் 15 நாட்களும் , மணிப்ப்பூரில் 16 நாட்களும் பேரவைக்கூட்டங்கள் நடந்துள்ளன. ராஜஸ்தான், ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 28 நாட்களுக்கும் குறைவான பேரவைக்கூட்டங்கள் நடந்துள்ளன.
மத்தியப்பிரதேசத்தில் 2009-13ம் ஆண்டுகளில் 167 நாட்கள் பேரவைக்கூட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் 2014-2018ம் ஆண்டுகளில் 135 நாட்களே பேரவைக்கூட்டங்கள் நடந்துள்ளன. இதேபோல் சத்தீஸ்கரில் 2009-13ம் ஆண்டுகளில் 159 நாட்கள் பேரவைக்கூட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் 2014-2018ம் ஆண்டுகளில் 145 நாட்களே பேரவைக்கூட்டங்கள் நடந்துள்ளன.
பேரவைக்கூட்டங்கள் பட்ஜெட் தாக்கலின் போதே அதிக நாட்கள் கூடியிருப்பதாகவும், நாடாளுமன்றக்கூட்டங்களும் பட்ஜெட் தொடரின் மூலமாகவே அதிக நாட்கள் நடைபெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

