'இது மைதானம் அல்ல'... குஜராத் சட்டப்பேரவைக்கு டி-ஷர்ட்டில் வந்த எம்.எல்.ஏ வெளியேற்றம்!

'இது மைதானம் அல்ல'... குஜராத் சட்டப்பேரவைக்கு டி-ஷர்ட்டில் வந்த எம்.எல்.ஏ வெளியேற்றம்!
'இது மைதானம் அல்ல'... குஜராத் சட்டப்பேரவைக்கு டி-ஷர்ட்டில் வந்த எம்.எல்.ஏ வெளியேற்றம்!

குஜராத்தில் உள்ள ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ டி-ஷர்ட் அணிந்துவந்ததன் காரணமாக சட்டப்பேரவயில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த எம்.எல்.ஏ-வின் பெயர் விமல் சுதாசமா.

சம்நாத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இதற்கு முன்பும் டி-ஷர்ட் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளார். அப்போதே சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி, பேரவையின் மாண்பை காக்கும் வகையில் எம்.எல்.ஏக்கள் ஒரு சட்டை அல்லது குர்தாவைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் கண்ணியத்தையும், சபையின் மாண்பையும் பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால், அதையும் மீறி நேற்று எம்.எல்.ஏ விமல் மீண்டும் டி-ஷர்ட் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தார். இதையடுத்து, சபாநாயகர் தனது முந்தைய அறிவுறுத்தலை நினைவுபடுத்தினார். மேலும், திரும்பிச் சென்று சட்டை அல்லது குர்தா போன்ற சாதாரணமான ஒன்றை அணிந்து திரும்பி வரும்படி கேட்டுக் கொண்டார். திரிவேதியின் முடிவை காங்கிரஸ் எதிர்த்தது. உறுப்பினர்கள் சபையில் குறிப்பிட்ட ஆடைகளை அணிவதைத் தடைசெய்ய எந்த விதியும் இல்லை என்று காங்கிரஸ் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

டி-ஷர்ட் ஆடையை அணிந்துதான் தேர்தலில் பிரசாரம் செய்ததாகவும், சட்டப்பேரவை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாகவும், அதனால் டி-ஷர்ட்டில் எந்தத் தவறும் இல்லை என்றும் காங்கிரஸ் உறுப்பினர் விமல் சுதாசமா வாதிட்டார். ``நான் ஒரு டி-ஷர்ட் அணிந்துதான் பிரச்சாரம் செய்தேன். இந்த டி-ஷர்ட் எனது வாக்காளர்களால் எனக்கு வழங்கப்பட்ட சான்றிதழ். நீங்கள் எனது வாக்காளர்களை அவமதிக்கிறீர்கள்" என்றார் அவர்.

ஆனால், ``உங்கள் வாக்காளர்களை நீங்கள் எவ்வாறு அணுகினீர்கள் என்பதை நான் அறிய விரும்பவில்லை. சபாநாயகரின் உத்தரவை நீங்கள் மதிக்கிறீர்கள். நீங்கள் ஒரு எம்.எல்.ஏ என்பதால் நீங்கள் விரும்பியதை அணிந்து சபைக்கு வர முடியாது. இது ஒரு விளையாட்டு மைதானம் அல்ல. பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன" என்று சபாநாயகர் பதிலடி கொடுத்தார்.

இப்படி வாதம் முற்றிக்கொண்டே போனது. மேலும், எம்.எல்.ஏ விமல் சட்டை அணிந்துவர மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி, எம்.எல்.ஏ விமலை வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், நான்கைந்து காவலர்கள் சேர்ந்து எம்.எல்.ஏ விமலை சபையில் இருந்து வெளியேற்றினர்.

இந்தச் சம்பவத்தின் காரணமாக குஜராத் சட்டப்பேரவையில் சில மணி நேரம் சலசலப்பு நீட்டித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com