”சட்டப்பேரவை 100வது ஆண்டு விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்தேன்”-மு.க.ஸ்டாலின்

”சட்டப்பேரவை 100வது ஆண்டு விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்தேன்”-மு.க.ஸ்டாலின்

”சட்டப்பேரவை 100வது ஆண்டு விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்தேன்”-மு.க.ஸ்டாலின்
Published on

டெல்லியில் குடியரசுத் தலைவரை இன்று சந்தித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதன்பின் செய்தியாளர்களுடன் பேசியபோது “குடியரசுத் தலைவரை, முதல்முறையாக இன்று சந்தித்தேன். தமிழ்நாட்டின் முதல்வராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர் வாழ்த்து சொன்னார். தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை தலைமைத் தாங்கி நடத்த குடியரசுத்தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அந்தவிழாவில் சட்டமன்ற வளாகத்துக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறேன்.

மேலும் மதுரையில் கலைஞர் பெயரில் அமையவிருக்கும் நூலகம், சென்னை கிண்டியில் அமையவிருக்கும் அரசு மருத்துவமனை, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியிருப்பதை குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் அமையவிருக்கும் நினைவுத்தூண் ஆகியவற்றின் அடிக்கல் நாட்டு விழாக்களை நடத்திக்கொடுக்க அழைப்பு விடுத்திருக்கிறேன். அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். எந்தத் தேதியில் இவையாவும் நடைபெறும் என்பது, பின்னர் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

மேகதாது விவகாரம் குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரும் பிரதமரும் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுடன் ஆலோசனைக்கோ பேச்சுவார்த்தைக்கோ இடமில்லையென்பதால் பிரதமரும் துறை சார்ந்த அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பர் என நம்புகிறோம். நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பான வழக்கு நடந்துவருவதால், நமக்கு முறையான தீர்ப்பு வரும் என நம்புகிறோம்” எனக்கூறினார்.

இதை ட்விட்டர் வழியாக தெரிவித்த அவர், “சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து நூறாண்டு நிறைவுபெற்றதற்கான விழாவுக்குத் தலைமைதாங்கி, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்தைத் திறந்துவைக்க அழைப்புவிடுத்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com