காவிரியில் கழிவுகள் கலக்கும் விவகாரம்: தமிழகம், கர்நாடகா பதிலளிக்க உத்தரவு
கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதை தடுக்க இருதரப்பு மாநில வல்லுநர்கள் குழு ஒன்றை அமைப்பது குறித்து இரு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி இரண்டு மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் 80 சதவீதத்திற்கும் மேல் தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் கலப்பதாகவும், இதைத் தடுக்க உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு கடந்த 2015ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பாப்டே, நாகேஸ்வரராவ் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தப் பிரச்னையை தீர்க்க வேண்டியது கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாடு வரியம்தான் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கர்நாடக அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியம் இந்தப் பிரச்னையில் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசின் சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து இரண்டு மாநில வல்லுநர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்தது.
இது குறித்த தங்களது கருத்தை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களுக்கும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.