சங்க் பரிவாரை சமாதானப்படுத்த பாஜக அரசு முயற்சி - மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

சங்க் பரிவாரை சமாதானப்படுத்த பாஜக அரசு முயற்சி - மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
சங்க் பரிவாரை சமாதானப்படுத்த பாஜக அரசு முயற்சி - மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை சுற்றியுள்ள பகுதிகளை அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைக்க மத்திய அரசு கோருவது சங்க் பரிவார் அமைப்பை சமாதானப்படுத்தும் முயற்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக உள்ள நிலையில் அதைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை பாதுகாப்பு நோக்கங்களுக்காக 199‌‌1ம் ஆண்டு மத்‌திய அரசு கையகப்படுத்தியது. சர்ச்சை ஏதும் இல்லாத இந்த நிலம் ராமர் கோயில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ராமஜென்ம‌பூமி நியாஸ் டிரஸ்ட் என்ற அமைப்புக்கு சொந்தமானது‌ என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்திருந்த உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தற்போதைய நிலையிலேயே அதாவது மத்திய அரசு வசமே இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் அந்நிலத்தை சம்மந்தப்பட்ட அமைப்பிட‌மே ஒப்படைக்க அரசு அனுமதி கேட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பெருகி வரும் நிலையிலும் மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையிலும் அரசின் இந்த கோரிக்கை ‌முக்கியத்துவம் பெறுகிறது. 

இத‌ற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் உரிய அனுமதியுடன் சர்ச்சையற்ற பகுதியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை தொடங்கும் நோக்கிலேயே இம்மனுவை அரசு தாக்கல் செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசியதாகவும் அவர் தன் டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். 

மத்திய அரசின் இந்த நடவடிக்கை இரண்டு விதமான கருத்துக்கள் எழுந்துள்ளன. மத்திய அரசின் இந்த நகர்வை விஷ்வ ஹிந்து பரிஷத் வரவேற்றுள்ளது. 

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “ராமர் கோயில் விவகாரத்தில் என்னென்ன சட்டரீதியான நடவடிக்கைகள் தேவையோ அதனை பாஜக செய்யும். மக்கள் ராமர் கோயில் கட்டவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அது நீதிமன்ற வழிகாட்டுதலின்படிதான் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஏற்கனவே பிரதமர் கூறியிருந்தார். இன்றைய மனுவும் சட்டரீதியான நடவடிக்கைதான்” என்றார். 

பாஜகவின் இந்த நடவடிக்கை உடனடியாக ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று கூறி வந்த சங்க் பரிவார் அமைப்பை சமாதானப்படுத்தும் முயற்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டே பாஜக இந்த முயற்சிகளை மேற்கொள்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது. 

அதேபோல், இது பாஜகவின் நயவஞ்சக செயல் என்று அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் சுதந்திரமான விசாரணையை தடுக்க மத்திய அரசு தன்னால் முயன்ற அனைத்தையும் செய்கிறது என்றும் சாடினார். 

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய அரசின் இந்த முயற்சியை வரவேற்றுள்ளார். சர்ச்சையில் இல்லாத நிலத்தை அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும் என்பதை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம் என்றார். முன்னதாக, ‘உச்ச நீதிமன்றத்தால் இந்த பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்றால், அதனை எங்களில் ஒப்படைக்கட்டும். நாங்கள் அதனை 24 மணி நேரத்தில் முடிக்கிறோம். ராமர் கோவில் விவகாரத்தில் மக்கள் தங்களது பொறுமையை இழந்து வருகிறார்கள்” என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com