எனக்கு தமிழ் தெரியாதா? - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்

எனக்கு தமிழ் தெரியாதா? - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்

எனக்கு தமிழ் தெரியாதா? - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்
Published on

மித்தாலி ராஜூக்கு தமிழ் தெரியாது எனக்கூறிய ரசிகருக்கு ‘தமிழ் என் தாய் மொழி’ என தமிழில் ட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளார் மித்தாலி ராஜ். 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி பிறந்தவர் மித்தாலி ராஜ். இவரின் தந்தை துரைராஜ் நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இந்திய விமானப் படையில் பணியாற்றிய துரைராஜ், பணி நிமித்தமாகப் பல ஊர்களுக்குச் செல்ல நேரிட்டபோது செகந்திராபாத்திலும் பணியாற்றினார். இதனால், அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரிக் கல்வியைத் தொடர்ந்தார் மித்தாலிராஜ்.

1999-ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கினார் மித்தாலி ராஜ். அப்போது அதிரடியாக 114 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார். இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 663 ரன்களும், 205 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6797 ரன்களும் எடுத்துள்ளார். 89 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 2364 ரன்களும் எடுத்துள்ளார். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

20 ஆண்டுகளாகப் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார் மித்தாலி ராஜ். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகக் காலம் விளையாடிய வீராங்கனையாகவும் திகழ்கிறார்.

இவருக்கு முன் சச்சின் டெண்டுல்கர் 22 ஆண்டுகளும், இலங்கையை சேர்ந்த சனத் ஜெய்சூர்யா 21 ஆண்டுகளும், பாகிஸ்தான் அளவில் ஜாவேத் மியாண்ட் 20 ஆண்டுகளும் விளையாடியுள்ளனர். இந்த வரிசையில் அடுத்ததாக மித்தாலி ராஜ் இடம் பெற்றிருப்பது இந்தியாவிற்கு மிக பெரிய பெருமையை சேர்த்துள்ளது. இதனைத்தொடர்ந்து மித்தாலி ராஜின் வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் விமர்சனம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்நிலையில், மித்தாலி ராஜூக்கு தமிழ் தெரியாது எனவும் அவர் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மட்டுமே நன்றாக பேசுவார் என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் மித்தாலிராஜ் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “தமிழ் என் தாய் மொழி. நான் தமிழ் நன்றாக பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை” என தமிழில் ட்வீட் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும் தான் ஒரு இந்தியனான பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com