\
Emergency , MISA
Emergency , MISAAI

மிசா சட்டம்.. நெருக்கடி நிலை குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை! அரசியல் பின்னணி விவரம்!

இந்திரா காந்தியின் உள்கட்சி, உள்நாட்டு, சர்வதேச நெருக்கடிகள் எவ்வாறு 1975 அவசரநிலைக்கும் ‘மிசா’ சட்டத்தின் அடக்குமுறைக்கும் வழிவகுத்தன என்பதை விரிவாக ஆராயும் பின்னணிக் கட்டுரை..
Published on
Summary

1960களின் இறுதி, 1970களின் தொடக்கத்தில் இந்திரா காந்தி எதிர்கொண்ட கட்சி உள்நெருக்கடி, சர்வதேச அழுத்தம், உள்நாட்டு போராட்டங்கள் அனைத்தும் சேர்ந்து 1975 அவசரநிலைக்கு வழிவகுத்தன. Maintenance of Internal Security Act எனும் மிசா சட்டம் மூலம் நீதிமன்றம், பிடியாணை இன்றி ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 1977 தேர்தலுக்குப் பின் ஜனதா அரசு மிசாவை ரத்து செய்தது.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசுபொருளான மிசா சட்டம் குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் அந்தச் சட்டத்தின் பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மிசா சட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் நெருக்கடி நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்,. நெருக்கடி நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அந்த காலகட்டத்தின் சூழலைத் தெரிந்துகொள்ள வேண்டும். 1964-இல் நேருவின் மறைவு மற்றும் 1966- இல் சாஸ்திரியின் திடீர் மறைவு ஆகிய சூழல்களுக்கு இடையே இந்திரா காந்தி பிரதமராகப் பொறுப்பேற்கிறார் . இந்திரா காந்தியின் தனித்துவமான அரசியல் போக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி கட்சிக்குள் பணிப்போரை உருவாக்கியது.

1967 தேர்தலில் முதன்முறையாக தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது. காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுற்ற நிலையிலும், 1971 தேர்தலில் இந்திரா காந்தி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். இருப்பினும் கட்சி இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வந்ததும், எதிரணியில் காமராஜர், நீலம் சஞ்சீவ ரெட்டி உள்ளிட்ட பெரிய தலைவர்கள் இருந்ததும் இந்திராவுக்குக் காங்கிரஸ் தரப்பிலிருந்து பெரும் நெருக்கடியைக் கொடுத்துக்கொண்டே இருந்தன.

Indira Gandhi
Indira GandhiANI

இத்தகைய உள்அரசியல் சூழலுக்கு இடையே, பாகிஸ்தானுடன் போர் மூண்டது. வங்கதேச விடுதலைப் போரில் இந்தியாவின் தலையீடு காரணமாக பாகிஸ்தானைப் பிளந்து ‘வங்கதேசம்’ என்ற புதிய நாடு உருவானது. இது இந்திராவின் முக்கிய ராஜதந்திர சாதனையாகக் கருதப்பட்டாலும், அவர் கடுமையான சர்வதேச அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையிலான பனிப்போர் உச்சத்திலிருந்த அக்காலத்தில், வெளியுறவுக் கொள்கையில் சுதந்திரமாகச் செயல்பட நினைத்த இந்திராவை அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அச்சுறுத்தலாகப் பார்த்தன. அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் தன்னைச் சந்திக்க வந்த இந்திராவைக் காத்திருக்க வைத்து அவமதித்த சம்பவமும் நிகழ்ந்தது. இதனோடு, உள்நாட்டு அளவிலும் இந்திரா காந்திக்கு எதிராக ஏராளமான போராட்டங்கள் வெடித்தன.

Indira gandhi
Indira gandhi AI

ஆக, கட்சி அரசியல், உள்நாட்டு அரசியல், சர்வதேச அரசியல் ஆகிய மூன்றிலும் ஒரே நேரத்தில் கடுமையான நெருக்கடிகளை இந்திரா காந்தி எதிர்கொண்டார் . இச்சூழலில்தான், 1971 தேர்தலில் இந்திரா காந்தி அரசு அதிகாரியைத் தனது பிரசாரத்திற்குப் பயன்படுத்தி விதிகளையும் சட்டத்தையும் மீறியதாகத் வழக்கு தொடரப்பட்டது. அவரது தேர்தல் வெற்றி செல்லாது என 1975 ஜூன் 12 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் தன்னை அரசியலிலிருந்தே ஒழித்துக்கட்டும் முயற்சிகள் நடப்பதாகக் கருதிய இந்திரா காந்தி, தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அரசியல் நெருக்கடியை நாட்டின் தேசிய நெருக்கடியாக மாற்றினார்.

1975 ஜூன் 25இல் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலை' அரசுக்கு எதிராக சிந்திக்கக்கூட முடியாத அடக்குமுறைச் சூழலை உருவாக்கியது . அதற்கு வழிவகுத்த முக்கியமான சட்டங்களில் ஒன்றுதான் 'மிசா' . . Maintenance of Internal Security Act என்பதன் சுருக்கமே ‘மிசா’ (MISA) என்பதாகும். தமிழில் இதனை "இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம்" என்று குறிப்பிடுவர்.

Misa
Misa PT

இச்சட்டம் காவல்துறைக்கும் அரசுக்கும் அளப்பரிய அதிகாரங்களை வழங்கியது பாதுகாப்புக் காரணங்களைக் கூறி நீதிமன்ற விசாரணை அல்லது பிடியாணை இன்றியே, ஒருவரைக் கைது செய்து சிறையில் அடைக்க இது வழிவகை செய்தது. 1950இல் இயற்றப்பட்டு 1969இல் காலாவதியான தடுப்புக் காவல் சட்டத்தின் நீட்சியாகவே மிசா சட்டம் இயற்றப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, லல்லுபிரசாத் யாதவ் மற்றும் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன், வைகோ உள்ளிட்ட பலர் மிசா சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர். அன்றைய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு, சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்டதால் 1977இல் உயிரிழந்தார்.

MISA
MISAPT

நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு 1977இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த ஜனதா கட்சி அரசு, 1978 ஜூலையில் மிசா சட்டத்தை முழுமையாக ரத்து செய்தது. இந்திய ஜனநாயக வரலாற்றில் நெருக்கடி நிலையும் மிசா சட்டமும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துச் சர்வாதிகாரத்தின் கோர முகத்தை வெளிப்படுத்திய ஒரு கருப்பு அத்தியாயமாக இன்றளவும் நினைவுகூரப்படுகின்றன.

Emergency , MISA
'1974-இல் என்ன நடந்தது தெரியுமா..' முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com