வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தலித்துக்கள்: தீர்ப்பு வந்தது? பலன் தருமா?

வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தலித்துக்கள்: தீர்ப்பு வந்தது? பலன் தருமா?
வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தலித்துக்கள்: தீர்ப்பு வந்தது? பலன் தருமா?

ஹரியானா மாநிலத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 33 பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டது.

2010ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு நாய் ஒன்று குரைத்ததில் தொடங்கியது அந்தக் கலவரம். ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள மிர்ச்பூர் கிராமத்தில் தலித் மக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள வேறு சாதியினர் இடையே இந்தக் கலவரம் நடைபெற்றது. வேறு சாதியினரை சேர்ந்த இளைஞர்கள் சிலரை பார்த்து தலித் மக்களின் நாய் குரைத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த நாயின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று அந்த இளைஞர்கள் கேட்டுள்ளார்கள். அப்போது இருதரப்பினரே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் பின்னர் கலவரமாக மாறியது. அப்போது தலித் வீடுகள் தீ வைக்கப்பட்டன. அடித்து நொறுக்கப்பட்டன. அந்த நேரத்தில் தீயில் சிக்கி தாரா சந்த்(60) மற்றும் அவரது மகள் சுமன்(18) ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தினால், பயந்து போன மிர்ச்புர் மக்களில் பெரும்பாலானோர் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். சொற்பமான சிலரே அங்கு தங்கியிருந்தனர். மிர்ச்புர் கிராமத்தில் இருந்து வெளியேறியவர்கள் காலியான நிலம் ஒன்றில் டெண்ட் அமைத்து தங்கினார்கள். துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் போலீசார் 75 பேருடன் தங்களது வாழ்க்கையை அந்த பொட்டல் வெளியில் கடத்தினார்கள். மீண்டும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சத்தில் அவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லவேயில்லை. 2016ம் ஆண்டு வரை சிஆர்பிஎஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழக்கினர். பின்னர் அவர்கள் வாபஸ் பெறப்பட்டனர். 

இதனிடையே, தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக சட்டப்பூர்வமான போராட்டத்தையும் மிர்ச்புர் தலித் மக்கள் மேற்கொண்டனர். முதலில் இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் தான் நடைபெற்றது. இந்த வழக்கில் உயர்வகுப்பைச் சேர்ந்த 103 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில், 82 பேரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தது. 15 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. ஆனால், விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். 

விசாரணை முடிந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், 33 பேரை டெல்லி உயர்நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. அதில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 3 ஆண்டுகளும், 12 பேருக்கு இரண்டு ஆண்டுகளும், 9 பேருக்கு ஒரு வருட தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதியை தரவில்லை. 

தீர்ப்பின் வெற்றியைக் கூட கொண்டாடாமல் தங்கள் பகுதியில் தெரு விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். தெரு விளக்கு அமைக்க வேண்டும் என்பது தீர்ப்பின் சாரம்சத்தில் இடம்பெறவில்லை. தீர்ப்பு வேறு சாதியினரை சேர்ந்தவர்களுக்கு எதிராக அமைந்துவிட்டதாக மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சத்தில் இந்தத் தெருவிளக்கும் உடனடியாக அமைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியான உடனே சாட்சி அளித்த 29 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்புக்காக அமர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

தீர்ப்பு வெளியான பிறகும் அவர்கள் தங்களது சொந்த கிராமத்திற்கு செல்லவில்லை. தங்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்று கருதுகிறார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com