கோவிலுக்குள் சென்ற பட்டியல் இனச் சிறுவன் மீது தாக்குதல்
ராஜஸ்தானில் கோவிலுக்குள் செல்ல முயன்ற பட்டியல் இனச் சிறுவனை சிலர் கட்டி வைத்து சரமாரி தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்த பட்டியல் இனச் சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் சிறுவனை கை, கால்களை கட்டிவிட்டு 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்துகிறது. இந்த சம்பவம் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற்றுள்ளது. சிறுவன் மீது தாக்குதல் நடத்துவதை கூட்டத்தில் மற்றொருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலான பின்னர் நேற்று போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே சிறுவன் கோவில் பூசாரியின் மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், சிறுவனை தாக்கியவர்களையும் சிறுவனையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறோம் எனவும் இரு குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.