இந்தியா - கனடா உறவில் விரிசல்: “ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு” - மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை!
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா - கனடா உறவில் மேலும் விரிசல்களை ஏற்படுத்தி வருகிறது. இதில் கனடாவிலிருந்து இந்திய தூதரை திரும்பப்பெற்ற மத்திய அரசு, டெல்லியிலுள்ள கனடா தூதரை வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவுக்கு எதிரான திட்டவட்டமான ஆதாரம் எதையும் தரவில்லை என்றும் உளவுத் தகவல்களையே தெரிவித்ததாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருப்பது இவ்விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் திட்டவட்டமான ஆதாரங்கள் எதையும் கனடா எங்களிடம் தரவில்லை என இந்தியா ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தது. இதை ட்ரூடோவின் புதிய அறிவிப்பு உறுதிப்படுத்தபடுத்தி உள்ளது.
நிஜ்ஜார் கொலை குறித்த ஆதாரங்கள் பற்றி தொடர்ந்து தவறான தகவல் கூறியது மூலம் இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ட்ரூடோ மட்டுமே பொறுப்பு” என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
முன்னதாக காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய ஏஜென்ட்டுகள் இருந்ததாக கனடா பிரதமர் ட்ரூடோ கூறியிருந்தார். இது குறித்த ஆதாரங்களையும் இந்தியாவிற்கு கொடுத்துள்ளதாகவும் அவர் கூறிவந்தார். ஆனால், ஆதாரங்கள் எதையும் கனடா தரவில்லை என இந்தியா கூறிவந்தது. தற்போது திட்டவட்ட ஆதாரம் எதையும் தரவில்லை என்றும் உளவுத் தகவல்களையே கூறியதாகவும் ட்ரூடோ ஒப்புக்கொண்டுள்ளார்.