20 நிமிடங்களுக்கு மேல் நீடித்த சந்திப்பு; பிரதமருடன் பேசியது என்ன?-உதயநிதி ஸ்டாலின் பேட்டி

20 நிமிடங்களுக்கு மேல் நீடித்த சந்திப்பு; பிரதமருடன் பேசியது என்ன?-உதயநிதி ஸ்டாலின் பேட்டி
20 நிமிடங்களுக்கு மேல் நீடித்த சந்திப்பு; பிரதமருடன் பேசியது என்ன?-உதயநிதி ஸ்டாலின் பேட்டி

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக, 2 நாள் அரசு முறைப் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். நேற்று (பிப்ரவரி 27) டெல்லியில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மற்றும் டெல்லியில் பணியாற்றும் தமிழகப் பிரிவு அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். பின்னர் நேற்று இரவு 7 மணியளவில் பஞ்சாப் ஆளுநரும், தமிழக முன்னாள் ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், இன்று காலை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் மேம்பாடு, திறன் மேம்பாடு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான‌ கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். சந்திப்பின்போது டெல்லி தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கவுதம் சிகாமணி, அப்துல்லா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் இன்று மாலை 4.30 மணிக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார். 20 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “தமிழக முதல்வரின் உடல்நலம் குறித்து பிரதமர் விசாரித்தார். அடுத்தமுறை கேலோ இந்தியா விளையாட்டை தமிழகத்தில் நடத்துவதற்கும், மத்திய அரசின் துறைகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், நீட் தேர்வில் விலக்கு அளிக்கவும் தாம் கோரிக்கை வைத்தேன். அதை பிரதமர் கேட்டுக் கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”SAI அமைப்பின் கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டும். தமிழகத்தில் மாவட்டம்தோறும் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பான திட்டம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தேன். தமிழ்நாட்டின் விளையாட்டு துறை குறித்து பிரதமர் கேட்டறிந்தார். மாவட்டம்தோறும் விளையாட்டு மைதானம் அமைக்க இருப்பது குறித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் உள்ள தீன் தயாள் உப்பாத்தியாயா மார்கில் அமைந்துள்ள திமுகவின் கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணாதுரை ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அலுவலகத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com