"ரூ.15 லட்சம் படிப்படியாக வழங்கப்படும்" - மத்திய இணையமைச்சர் உறுதி
நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் படிப்படியாக சென்றடையும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்தவாலே கூறியுள்ளார்
மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராம்தாஸ் அத்தவாலே, 15 லட்சம் ரூபாய் ஒரே தவணையாக வராது என்றும், படிப்படியாக வரும் என்றும் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் கேட்டதாகவும், ஆனால் அவர்கள் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சில தொழில்நுட்ப இந்தப் பிரச்னைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வந்து, ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி அளித்ததாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தப் பின்னணியில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே பணம் படிப்படியாக வழங்கப்படும் என கூறியுள்ளது பரபரப்பு விவாதப் பொருளாகி வருகிறது.