தானியங்கி கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை: அமைச்சர் நிதின் கட்கரி
தானியங்கி கார்கள் இந்திய சாலைகளில் இயங்க அனுமதிக்கப் போவதில்லை என்று மத்திய சாலைபோக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் ஆண்டுதோறும் 22,000 ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்படுவதாகத் தெரிவித்தார். வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கும் வகையிலான நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தசூழலில் தானியங்கிக் கார்களை இந்தியச் சாலைகளில் எப்படி அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
வெளிநாட்டு எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளர்களின் இறக்குமதி வரியைக் குறைக்கும் முடிவுக்கு தனது அமைச்சகம் ஆதரவு அளிக்காது என்றும், அதேநேரம் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதனால் இறக்குமதி வரியைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். சர்வதேச தரத்தில் வாகன உற்பத்தியை இந்திய உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஒரே ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கி.மீ. தூரம் பயணிக்கும் வகையிலான மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்ய இந்திய நிறுவனம் ஒன்று முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.