இந்தியா
பயங்கரவாதத்தை மத்திய அரசு எள்ளளவும் சகித்து கொள்ளாது: அமித் ஷா
பயங்கரவாதத்தை மத்திய அரசு எள்ளளவும் சகித்து கொள்ளாது: அமித் ஷா
மத்திய அரசு பயங்கரவாதத்தை எள்ளளவும் சகித்துக்கொள்ளாது என கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீரில் முழுமையான அமைதி திரும்புவரை திருப்தி கொள்ளக் கூடாது என கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை மேலும் நீட்டித்துள்ள அமித் ஷா இரவுப் பொழுதை புல்வாமாவில் உள்ள சிஆர்.பி.எஃப் முகாமில் கழித்தார். அங்கு பாதுகாப்பு படையினரிடையே பேசிய அமித் ஷா அவர்களுடன் ஒரு நாளை கழித்து அவர்களது பிரச்னைகளை புரிந்துகொள்ள விரும்புவதாக கூறினார். ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரடைந்து வருவதாக கூறிய அமித் ஷா, நமது வாழ்நாளில் அமைதியான ஜம்மு காஷ்மீரை சாத்தியபடுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின் காஷ்மீரில் ரத்தம் சிந்தப்படுவதை தடுத்த பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார். முன்னதாக ஜம்மு காஷ்மீரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அவர் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

