தடுப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு உள்ளே நுழைந்த தொழிலாளர்கள் - வைரல் வீடியோ
தடுப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு உள்ளே நுழைந்த தொழிலாளர்கள் - வைரல் வீடியோ
உத்தரப் பிரதேச - மத்தியப் பிரதேசம் இடையிலான எல்லையிலுள்ள தடுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு நுழையும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த ஒரு காணொளி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆதரவற்றோர்கள் உள்ளிட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்தே, தங்களது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாகவும், மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள் மூலம் பயணித்து வருகின்றனர்.
இதனையடுத்து அவர்களைச் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்புவதற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்தச் சிறப்பு ரயில்களின் சேவை பெரும்பான்மையான வெளிமாநிலத்தவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதனால் இன்றும் கூட வெளிமாநிலத்தவர்கள் தங்களின் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சில இடங்களில் அவர்களைத் தடுத்து நிறுத்தும் காவல்துறையினர் அவர்களைத் திரும்பிச் செல்ல வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் உத்தரப் பிரதேச- மத்தியப் பிரதேச எல்லையில் வெளிமாநில தொழிலாளர்களைத் தடுக்கும் விதமாகத் தடுப்புகள் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் அங்கு வந்த நூற்றுக்கணக்கான வெளிமாநிலத்தவர்கள் தடுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டுக் கடந்து சென்றுள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களால் ஏதும் செய்ய முடியவில்லை. இது தொடர்பாக வீடியோ ஒன்றை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.