வெளியேறும் தொழிலாளர்களால் குஜராத் வர்த்தகம் பாதிப்பு
வன்முறை சம்பவத்தால் வெளிமாநில தொழிலாளர்கள் குஜராத்தை விட்டு கூட்டம் கூட்டமாக கிளம்பும் நிலையில் அங்கு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சபர்கண்டா மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதேநாளில் கைது செய்யப்பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தச் சிறுமி அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.
இதனிடையே குஜராத்தில் தங்கி வேலை பார்த்துவரும் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்றது. உத்திரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர். இதனால் குஜராத்தில் வாழ்வதற்கு பயந்த அவர்கள் கூட்டம் கூட்டமாக குஜராத்தை விட்டு வெளியேறினர். இந்நிலையில் வெளியேறிய மற்ற மாநில மக்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என குஜராத் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குஜராத் மக்கள் யாரும் வன்முறை சம்பங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் முதலமைச்சர் விஜய் ரூபானி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் குஜராத்தில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் பலர் வெளியேறிய காரணத்தினால் அங்குள்ள பல தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாத காரணத்தினால் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குஜராத்தின் வடக்குப்பகுதியில் உள்ள நிறுவனங்கள்தான் இந்தப் பாதிப்பை கடுமையாக சந்தித்துள்ளன. பண்டிகை நேரம் நெருங்கியுள்ள காலத்தில் தொழிலாளர்கள் இல்லாதது நிறுவனங்களுக்கு பலத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
குஜராத் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத் தலைவர் ஜெய்மின் வாசா இதுகுறித்து கூறும்போது, “போலீசார், உள்ளூர் கிராம மக்கள், தொழில்துறை பிரதிநிதிகள் ஆகியோருடன் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளோம். வெளிமாநில தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக விவாதித்திருக்கிறோம். விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு பயமற்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அவசியம்”எனத் தெரிவித்தார். கிட்டத்தட்ட 35 சதவீத வெளிமாநில தொழிலாளர்கள் அகமதாபாத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.