\
scary incident
scary incident ai

நள்ளிரவில் நடக்கும் அமானுஷ்யம்.. தலைதெறிக்க ஓடிய 600 மாணவர்கள்! அதிர்ச்சியூட்டும் திகில் சம்பவம்!

நள்ளிரவு நெருங்க நெருங்க முற்றிலும் வேறொரு உலகமாக மாறிவிடும். திடீரென ஒரு விசித்திரமான சத்தம் கேட்கும். சில நொடிகள் அமைதியாகிவிடும். பின்னர் யாரோ அழுவது போன்று சத்தம் கேட்கும். திடீரென கால் கொலுசு சத்தமும் கேட்கும்.
Published on
Summary

மஹாராஷ்டிரா அமராவதி மாவட்ட டோமா அரசு பழங்குடியினர் விடுதி பள்ளியில், நள்ளிரவு வேளையில் கொலுசு சத்தம், முனகல், அழுகை, அமானுஷ்ய அச்சம் என பரவிய வதந்திகள் காரணமாக 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரவோடு இரவாக ஓடிச் சென்ற பரபரப்பு சம்பவம். பின்னர் மருத்துவர்கள் இது பேய் பிடிப்பு அல்ல, ‘மாஸ் ஹிஸ்டீரியா’ எனப்படும் மனஅழுத்தத்தால் ஏற்பட்ட தற்காலிக மனநலப் பாதிப்பு என விளக்கம் அளித்தனர்.

பகல் நேரத்தில் சிரிப்பும், சத்தமுமாக இருக்கும் பள்ளி வளாகம். நள்ளிரவு நெருங்க நெருங்க முற்றிலும் வேறொரு உலகமாக மாறிவிடும். திடீரென ஒரு விசித்திரமான சத்தம் கேட்கும். சில நொடிகள் அமைதியாகிவிடும். பின்னர் யாரோ அழுவது போன்று சத்தம் கேட்கும். திடீரென கால் கொலுசு சத்தமும் கேட்கும். இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஒரு பள்ளியில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் உடைமைகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு தலைதெறிக்க ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

school incident
school incidentai

மஹாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள மெல்காட் பகுதியில் உள்ள சிகல்தாரா தாலுகாவின் டோமா கிராமத்தில் அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல், இந்த விடுதியில் தங்கியிருந்த சில மாணவிகள் தங்களுக்கு நள்ளிரவில் விசித்திரமான சத்தங்கள் கேட்பதாகப் பயத்துடன் விடுதிக் காப்பாளரிடம் கூறியுள்ளனர். குறிப்பாக, நள்ளிரவு வேளையில் யாரோ கொலுசு அணிந்து நடப்பது போன்ற சத்தமும், விசித்திரமான முனகல்களும் கேட்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சில மாணவிகள் விசித்திரமாக நடந்துகொள்வதும், சிலர் திடீரென மயங்கி விழுவதும், இன்னும் சிலர் அழுதுகொண்டே திடீரென ஆக்ரோஷமாகி பயங்கர சத்தத்துடன் சிரிப்பதும் நடந்துள்ளது.

இதனை நேரில் பார்த்த மற்ற மாணவர்களுக்கும், கிராம மக்களுக்கும் விடுதிக்குள் ஏதோ அமானுஷ்யம் நடப்பதாகக் கருதி, இந்தப் பேச்சு ஊர் முழுவதும் பரவியுள்ளது. சிலர், சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த இளைஞரின் ஆவிதான் இதற்குக் காரணம் என்றும், இன்னும் சிலர் பள்ளியின் பின்புறம் பேய்கள் இருப்பதாக அப்பகுதி மக்களால் கருதப்படும் மகுவா மரத்தை வெட்டியதுதான் காரணம் என்றும் பேசத் தொடங்கினர். பயம் உச்சக்கட்டத்தை எட்டியதால், அங்கு விடுதியில் தங்கியிருந்த 345 மாணவிகள், 263 மாணவர்கள் என மொத்தம் 608 பேர் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக விடுதியை விட்டு வெளியேறி, தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதனால் விடுதி வெறிச்சோடியது.

இந்தத் தகவல் பரவியதைத் தொடர்ந்து, மாவட்ட அரசு பொது மருத்துவமனையின் மனநல மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவிகளைத் தீவிரமாகப் பரிசோதித்தனர். மருத்துவர்கள், அங்கு எந்தவொரு அமானுஷ்ய சக்தியும் இல்லை. “மாணவிகளுக்கு ஏற்பட்டது பேய் பிடிப்பு அல்ல. இது கடுமையான மன அழுத்தம் மற்றும் பயத்தினால் ஏற்படும் ‘மாஸ் ஹிஸ்டீரியா’ எனப்படும் தற்காலிக மனநலப் பாதிப்பாகும்” என்று தெரிவித்தனர். அமராவதி நாடாளுமன்ற உறுப்பினர் பல்வந்த் வான்கடேவும், மாணவர்கள் பயப்படாமல் மீண்டும் வகுப்புகளுக்கு வரத் தொடங்குமாறு வலியுறுத்தினார். இதையடுத்து தற்போது சில மாணவர்கள் மீண்டும் விடுதிக்குத் திரும்பி வருவதாகக் கூறப்படுகிறது. பேய் பயத்தால் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் இருந்து ஓட்டம் பிடித்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com