\
Air India Flight turbulence
Air India Flight turbulenceANI

நடுவானில் திகில் சம்பவம்! சட்டென 300 அடி சரிந்த Air India விமானம்! தூக்கி வீசப்பட்ட பயணிகள்!

தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், செவ்வாய்க்கிழமை நடுவானில் Turbulence அதாவது கடுமையான காற்று அதிர்வில் சிக்கியதால், திடீரென சுமார் 300 அடி உயரம் குறைந்தது.
Published on
Summary

134 பயணிகளுடன் பறந்த AI 2379 ஏர் இந்தியா விமானம், பயணத்தின் நடுப்பகுதியில் கடுமையான காற்று அதிர்வால் பலமாகக் குலுங்கி சில நிமிடங்கள் சாய்ந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பெல்ட் இல்லாமல் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு லேசான காயமடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் மருத்துவ குழு, ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்து சிகிச்சை அளித்தது. ஏர் இந்தியா, தீவிர காயம் எதுவும் இல்லை எனவும் விசாரணைக்கு ஒத்துழைப்போம் எனவும் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

AI 2379 என்ற ஏர் இந்தியாவின் ஏர்பஸ் A320 ரக விமானத்தில் 134 பயணிகள் பயணம் செய்தனர். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பறந்துகொண்டிருந்த விமானம், பயணத்தின் நடுப்பகுதியில் கடுமையான வானிலை நிலவிய பகுதியைக் கடந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் காற்று அதிர்வால் விமானம் பலமாகக் குலுங்கியதுடன், சில நிமிடங்கள் ஒரு பக்கமாக சாய்ந்ததாக பயணிகள் தெரிவித்தனர். அப்போது பாதுகாப்பு பெல்ட் அணியாமல் இருந்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் இருக்கைகளில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

Air India Flight turbulence
Air India Flight turbulenceANI

இதுகுறித்து செய்தி நிறுவனமான ANI-யிடம் பேசிய பயணி ஒருவர், 'பயணம் தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் பலரும் தூங்கிக்கொண்டிருந்தனர். திடீரென விமானம் கடுமையாக சரிந்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பலமாகக் குலுங்கியது. பலர் இருக்கைகளில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் முதுகு மற்றும் தோள்பட்டையில் காயமடைந்தனர்' என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, விமானம் காலை 11 மணியளவில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினரும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. சிலர் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மற்றவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர்.

Air India Flight turbulence
Air India Flight turbulenceANI

இந்தச் சம்பவம் குறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், பயணத்தின் நடுப்பகுதியில் குறுகிய நேர காற்று அதிர்வால் விமானத்தின் உயரத்தில் தற்காலிக மாற்றம் ஏற்பட்டதாகவும், விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கியதாகவும் தெரிவித்துள்ளது. இதுவரை யாருக்கும் தீவிர காயம் ஏற்படவில்லை என்றும், கூடுதல் மருத்துவ பரிசோதனை தேவைப்பட்ட சில பயணிகள் மற்றும் பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவ மையத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், பயணிகளின் பாதுகாப்பே தங்களின் முதன்மை முன்னுரிமை என்றும், இந்தச் சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்புகள் மேற்கொள்ளும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Air India Flight turbulence
ஈரானை எதுவுமே செய்யமுடியவில்லை.. ட்ரம்ப் கையிலெடுக்கும் அரிதான ‘Brainstorming' முறை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com