தாய்ப்பால் கொடுக்க ஒரு தனி அறை - கேரள மெட்ரோ சாதனை
கேரள மெட்ரோ ரயில் நிலையத்தில் தாய்ப்பால் கொடுப்பதற்கு சிறப்பு அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
வேலை மற்றும் பொது இடங்களில் தாய்ப்பால் கொடுக்கும் வசதியை ஏற்படுத்துவதே குழந்தை நலத்திட்ட பணிகளில் முதன்மையான ஒன்று என உலக சுகாதார மையம் கூறியுள்ளது. அதற்கேற்ப கேரள மெட்ரோ ரயில் நிறுவனம் மகளிருக்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறது. தாய்ப்பால் கொடுப்பதற்காக சிறப்பு அறையை ஒன்றை உருவாக்கியுள்ளது. இச்சிறப்பு அறை கேரளாவிலுள்ள ஆலுவா மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்படுள்ளது.
இந்த அறை மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாற்காலி, மின்விசிறி, மின்விளக்கு, மொபைல் சார்ஜ் செய்யும் வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அறையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முறை மற்றும் தாய்ப்பால் கொடுப்பதினால் குழந்தைக்கு ஏற்படும் நன்மை போன்ற வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.
ஆலுவா மெட்ரோ ரயில் நிலையத்தில் இவ்வசதியை திறந்துவைத்த கேரள மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகமது ஹனீஷ், “இந்தியாவிலே முதன்முறையாக மெட்ரோ ரயில் நிலையத்தில் தாய்ப்பால் கொடுக்கும் வசதி கேரளாவில்தான் தொடங்கப்பட்டுள்ளது. கேரளா மெட்ரோ ரயில் நிறுவனம் எப்போதும் பெண்களுக்கு சாதகமான ஒன்றாக இருந்து வருகிறது. ஏனென்றால் கேரளா மெட்ரோவில் 700 பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் இதேபோன்ற வசதி எம்.ஜி.ரோடு, லிஸ்ஸி மற்றும் எடப்பள்ளி மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் அமைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்தப் பிரத்யேக அறையை ‘ஐ லவ் 9 மன்த்’ ('I Love 9 months') என்ற மகப்பேறு நல நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த அறையை வடிவமைப்பதற்கு ரூ1.5 லட்சம் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவையும் சிஐஎம்ஏஆர் மருத்துவமனை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

