காஷ்மீரில் வன்முறை நிகழ்வதற்கு 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படமே காரணம் - மெகபூபா முஃப்தி

காஷ்மீரில் வன்முறை நிகழ்வதற்கு 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படமே காரணம் - மெகபூபா முஃப்தி
காஷ்மீரில் வன்முறை நிகழ்வதற்கு 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படமே காரணம் - மெகபூபா முஃப்தி

காஷ்மீரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதற்கு 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படமே காரணம் என அம்மாநில முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக பண்டிட் சமூகத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதலை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ராகுல் பட் என்பவர் உயிரிழந்தார். இந்தக் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க காஷ்மீர் நிர்வாகம் எஸ்ஐடி குழுவை அமைத்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மெகபூபா முஃப்தியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், "எனது ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பான சூழல் அமைத்துக் கொடுக்கப்பட்டது. தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்திருந்த 2016-ம் ஆண்டு காலக்கட்டத்திலும் கூட, ஒரு காஷ்மீர் பண்டிட் கூட கொலை செய்யப்படவில்லை. இவ்வாறு அமைதி பூங்காவாக இருந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று வன்முறை நிகழ்வதற்கு என்ன காரணம்? 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படமே. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்ததுடன், வன்முறையையும் தூண்டிவிட்டிருக்கிறது. தற்போது நடக்கும் வன்முறைகளுக்கும் அந்த திரைப்படத்தை பொறுப்பேற்க செய்ய வேண்டும்" என்றார்.

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' . காஷ்மீரில் 1990-களில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினருக்கு எதிராக தீவிரவாதிகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்துக்கு ஒருதரப்பினர் வரவேற்பும், மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com