ஒரே மாதத்தில் 11 எம்.எல்.ஏ-க்களை பறிகொடுத்த கட்சி... மேகாலயா அரசியலில் அதிரடி திருப்பம்!
மேகாலயா மாநிலத்தில் 12 எம்எல்ஏக்களை கொண்டிருந்த ஐக்கிய ஜனநாயகக் கட்சியில், தற்போது ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே இருக்கிறார். காரணம் என்ன? அங்கு நிலவும் அரசியல் சூழலை விரிவாக பார்க்கலாம்...
மேகாலயாவில், தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், முதல்வருமான கான்ராட் சங்மா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது ஐக்கிய ஜனநாயகக் கட்சி. 12 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த அக்கட்சி, தற்போது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரை கொண்ட கட்சியாக சுருங்கியிருக்கிறது. கடந்த ஒரு மாதத்துக்குள் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் 8 சட்டமன்ற உறுப்பினர்கள், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும் மூவர், தேசிய மக்கள் கட்சியில் சேர்ந்துள்ளனர். தற்போதைய சூழலில், மெத்பா லிங்டோ (Metbah Lyngdoh) மட்டுமே, ஐக்கிய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, கட்சியில் இருந்து விலகும் அளவுக்கு ஏன் இவ்வளவு அதிருப்தி என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி நடந்துவரும் நிலையில், மேகாலயாவில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதற்காகவே பாஜகவில் இணைந்ததாக கூறுகிறார் கேர்மென் ஷில்லா (Kyrmen Shylla). நிலக்கரி சுரங்கம், மேகாலயா குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவை தொடர்பாக பல கோரிக்கைகள் உள்ளதாகவும், அதற்கு பாஜக மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் என்கிறார் ஷில்லா.
சட்டமன்றத்தில் பாஜகவின் பலம் உயர்ந்துள்ளது அக்கட்சிக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் பலன் என கூறியுள்ளார் ஷில்லா. ஐக்கிய ஜனநாயக கட்சியில் தலைமைத்துவ சிக்கல்கள் இருந்ததாகவும், தாங்கள் பாஜகவை நம்புவதாகவும் கூறுகின்றனர் அக்கட்சியில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர்கள்.
எந்த கட்சியாக இருந்தாலும் மாநிலத்தின் வளர்ச்சியே முக்கியம் என்றும், இதனால்தான் மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியை அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார் மேகாலயா பாஜக செய்தித் தொடர்பாளர் கார்க்ராங்.
மொத்தம் 60 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள மேகாலயா சட்டமன்றத்தில் தேசிய மக்கள் கட்சிக்கு 36 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவுக்கு 10, HSPDP கட்சிக்கு 2 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஐக்கிய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும், சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவரும் உள்ளனர். எதிர்க்கட்சிகள் அணியில் MAITC இல் 5 பேரும், VPPஇல் 4 பேரும் உள்ளனர்.

