ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி கிடையாது - மத்திய அரசு
தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டாம் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்காலிக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்பாக கருதப்பட்ட ஒரு விஷயம் மாத சம்பளம் பெறுவோரின் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என்பது தான். இந்நிலையில் தனிநபர் வருமானம் ரூ.5 லட்சம் வரை இருக்கும் பட்சத்தில் வரி செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ரூ.2.5 லட்சமாக தனிநபர் வருமான வரி விலக்கு உச்சபட்சமாக இருந்தது. உச்சவரம்பில் மாற்றம் செய்யாமல், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் மட்டும் வரி செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு முன்பு இருந்த முறைப்படி, ரூ.2.5 லட்சம் வருமான வரி விலக்கு உச்சவரம்பு இருந்தது. இதன்படி ரூ.2.5 லட்சம் ஆண்டு வருமானம் பெறும் மாத ஊதியர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம். அதேசமயம் ரூ.3 லட்சம் வருமானம் பெறுவோர், ரூ.2.5 லட்சம் போக மீதமுள்ள ரூ.50 ஆயிரத்திற்கு வரி செலுத்த வேண்டும். தற்போது இது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய புதிய அறிவிப்பின்படி, ரூ.6.5 லட்சம் வருமானம் பெறுவோர் ரூ.1.5 லட்சம் வரை குறிப்பிட்ட சில சேமிப்புகளில் முதலீடுகள் செய்தால், வருமான வரி செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

