\
tukaram mundhe
tukaram mundheinstagram

21 ஆண்டுகளில் 24 முறை இடமாற்றம்! அதிரடிக்குப் பெயர்போன ஐஏஎஸ் அதிகாரி.. யார் இந்த துக்காராம் முண்டே?

ஒரு அதிகாரி தான் பணியாற்றும் இடத்தில் அதிரடியான நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் பிரபலமான அந்த ஐஏஎஸ் அதிகாரி யார்? மக்கள் மனங்களில் இடம்பிடிக்கும் அளவிற்கு அவர் என்ன செய்தார்? என்பதைப் பார்க்கலாம்.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

ஒரு அதிகாரி தான் பணியாற்றும் இடத்தில் அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கிறார்… அடுத்த சில மாதங்களிலேயே அவருக்குப் பணியிட மாற்றம் செய்யப்படுகிறது. மீண்டும் புதிய பொறுப்பு… அங்கும் அதிரடி நடவடிக்கைகள்… மறுபடியும் இடமாற்றம்! இப்படி, அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் பிரபலமான அந்த ஐஏஎஸ் அதிகாரி யார்? மக்கள் மனங்களில் இடம்பிடிக்கும் அளவிற்கு அவர் என்ன செய்தார்? என்பதைப் பார்க்கலாம்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் துக்காராம் முண்டே. கிராமப்புறச் சூழலில் வளர்ந்த இவர், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, 2005-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். ஆனால், இவருடைய நிர்வாகப் பயணத்தை மற்ற அதிகாரிகளின் பயணத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது, இவர் வகித்த பதவிகள் மட்டுமல்ல… ஒவ்வொரு இடத்திலும் இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளும், தொடர்ந்து நிகழ்ந்த இடமாற்றங்களும்தான்!

tukaram mundhe
tukaram mundhereuters

நாந்தேட் மாவட்டத்தில் பணியாற்றியபோது, சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது… சோலாப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, வறட்சியைச் சமாளிக்கவும் நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தவும் நீர் சேமிப்புப் பணிகளில் கவனம் செலுத்தியது… நவி மும்பை மாநகராட்சி ஆணையராக இருந்தபோது, சட்டவிரோதக் கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது… நாக்பூர் மாநகராட்சி ஆணையராக இருந்தபோது, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் விதிமுறைகளையும் தீவிரமாக அமல்படுத்தியது… சுகாதாரத் துறையில் பணியாற்றியபோது, மருத்துவமனைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலும் மருத்துவச் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தியது… உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் நிறுவனங்களைக் கண்காணிப்பதற்கான ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது எனப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இப்படி, தான் செல்லும் இடமெல்லாம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கவனம் பெற்றவர் ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டே! அதுமட்டுமல்லாமல், தனது 21 ஆண்டுகால ஐஏஎஸ் பயணத்தில் 24 முறை பணியிட மாற்றத்தைச் சந்தித்திருக்கிறார். இவருடைய அதிரடியான நிர்வாக நடவடிக்கைகளும் பணியிட மாற்றங்களுக்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இவருடைய நிர்வாகப் பாணி அனைவராலும் ஒரே மாதிரியாகப் பார்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருபுறம், இவருடைய அதிரடி நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகள் கிடைத்தாலும், மறுபுறம் அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறார்.

tukaram mundhe
tukaram mundheani

ஆனாலும், மகாராஷ்டிரா மக்களிடையே மக்கள் பிரச்சினைகளில் நேரடியாகக் கவனம் செலுத்தும் அதிகாரி என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கிறார் துக்காராம் முண்டே. அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் இவருக்குத் தனி ஆதரவு இருந்து வருகிறது. 43 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட சமூக வலைதளக் பிரம்பலமாகவும் இவர் இருந்து வருகிறார்.. இந்தியாவில் மட்டுமின்றி, உலக நாடுகளின் கவனத்தையும் இவர் ஈர்த்திருக்கிறார். அமெரிக்காவின் பிரபல நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் கூட இவரைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி, அதிரடி நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவு, சர்ச்சைகள் மற்றும் அடுத்தடுத்த பணியிட மாற்றங்கள் எனத் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறார் துக்காராம் முண்டே.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com