விமான தீயணைப்புத் துறையில் ஒரு சிங்கப் பெண் - ‘தனி ஒருத்தி’ தானியா சன்யால்
விமான தீயணைப்புத்துறை பணியில் சேர்ந்த முதல் பெண்மணியாகத் தானியா சன்யால் திகழ்கிறார்.
இன்று சர்வதேச மகளிர் தினம். ‘ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்’ என்று பாடினார் பாரதியார். அந்தப் பெண்மையைப் போற்றும் நாளில் தனது பணியில் தனித்துவம் மிக்கவராக இருந்து வருகிறார் தானியா சன்யால். கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர் தானியா. இவர்தான் இந்திய விமான நிலைய ஆணையத்தால் நியமிக்கப்பட்ட முதல் பெண் தீயணைப்பு வீரர். 2018 வரை, ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியா ஆண்களை மட்டுமே தீயணைப்பு வீரர்களாகச் சேர்த்துக் கொண்டது. ஆனால் கடந்த ஆண்டு அந்த விதிகள் தளர்த்தப்பட்டன.
அதன்பின் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில் நுழைந்த இவர் வலுவான பெண் பணியாளராக தன்னை வெளிப்படுத்தினார். இப்போது இவர் ஏஏஐ உடன் தீயணைப்பு வீரர்களாக விரும்பும் ஆண்களுக்கும் ஒரு சில பெண்களுக்கும் பயிற்சி அளிக்கிறார். அந்த அளவுக்கு இந்தத் துறையில் தனித்துவமிக்க பெண்ணாக மிளிர்கிறார் சன்யால்.
தீயணைப்பு வீரராக வேண்டும் என்றால் எழுத்து, உடற்தகுதி, ஓட்டுநர் மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும் உடல் வலிமையை வெளிப்படுத்த வேண்டும், நீண்ட தூரம் ஓட வேண்டும், ஏணியில் ஏற வேண்டும் மற்றும் 60 மீட்டர் தூரத்திற்கு 40 கிலோ மணல் மூட்டை எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி அத்தனை வேலைகளும் கடினமானவை. அதில் எல்லாம் தனது திறமைகளைக் காட்டி வென்றுள்ளார் சன்யால்.
இந்தியப் பாதுகாப்பு நிபுணத்துவ சங்கம் (SPAI) தானியாவுக்கு சிட்டிசன் பாதுகாப்பு விருது 2019 வழங்கப்பட்டது. இது தவிர, இந்திய அரசின் டெல்லி மகளிர் ஆணையத்திடமிருந்து டி.சி.டபிள்யூ சாதனை விருதையும் பெற்றுள்ளார்.
“என் குழந்தைப் பருவத்திலிருந்தே, நான் எப்போதும் சவாலான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கனவு கண்டேன். சமுதாயத்தில் சாதகமான மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய ஒரு நபராக வர நான் கனவு கண்டேன்.
தாவரவியலில் முதுகலைப் படிப்பை முடித்தேன். ஒருமுறை தீயணைப்பு வீரர்களுக்கான செய்தித்தாளில் ஆள்சேர்ப்பு விளம்பரத்தைக் கண்டேன். உடனே நான் அந்தப் பதவிக்கு விண்ணப்பித்தேன்” என்கிறார் தானியா.
மேலும் அவர், “என் பெற்றோர் என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகவும் ஆதரவாக இருந்தனர். இந்தத் துறையில் பணிபுரியும் முதல் பெண் நான்தான் என்ற செய்தியை எனது பெற்றோரிடம் நான் வெளிப்படுத்தியபோது. அவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். மேலும் எனக்கு வேலை கிடைத்தது என்பதில் பெருமிதம் அடைந்தேன்” என்கிறார் நம்பிக்கையுடன் தானியா.