கொரோனா கால மகத்துவர்: மும்பையை மீட்கும் முனைப்பில் மாநகராட்சி ஆணையர் சாஹல்!

கொரோனா கால மகத்துவர்: மும்பையை மீட்கும் முனைப்பில் மாநகராட்சி ஆணையர் சாஹல்!
கொரோனா கால மகத்துவர்: மும்பையை மீட்கும் முனைப்பில் மாநகராட்சி ஆணையர் சாஹல்!

மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) ஆணையர் இக்பால் சிங் சாஹல், கொரோனா நெருக்கடியை சிறப்பாக கையாள்வதற்காக மும்பை மாநகரைத் தாண்டி பாராட்டப்பட்டு வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம்தான் இந்தியாவில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவும் மாநிலம். தினமும் 55,000-க்கும் அதிகமான பாதிப்புகள் என அங்கு கொரோனா பாதிப்பின் தீவிரம் குறையாமல் இருந்து வந்தது. அதிலும், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், ஏப்ரல் தொடக்கத்தில் தினமும் 11,000-க்கும் மேல் சென்றுகொண்டிருந்தது தினசரி பாதிப்பு. ஆனால், கடந்த 20 நாட்களாக இங்கு பாதிப்பு பாதிக்கும் குறைவு. அதிலும் கடந்த திங்கள்கிழமை மும்பையில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 3,876 என்ற அளவிலேயே இருந்தது.

டெல்லி, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் தலைநகர்களை கணக்கிடும்போது ஒப்பீட்டளவில் மும்பையில் பாதிப்பின் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹலின் தைரியமானதும், ஆற்றல்மிக்கதுமான தலைமை என்றால் அது மிகையாகாது.

1989-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இக்பால் சிங் சாஹல் கடந்த ஆண்டு மே மாதம் மும்பையில் கொரோனா நெருக்கடியின் உச்சத்தில் இருந்தபோது மாநகராட்சி ஆணையராக பதவியேற்றுக்கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டங்களில் மும்பை அரசு மருத்துவமனை வார்டுகளில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி கொண்டிருந்தன. போதாக்குறைக்கு பிபிஇ கிட், கையுறைகள், சானிடைசர்கள், உடல் பைகள் வரை கிட்டத்தட்ட அனைத்தும் பற்றாக்குறையாகவே இருந்து வந்தன.

இதேபோல், மும்பையின் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 3,00,000-க்கும் அதிகமான மக்கள் அந்தத் தருணத்தில் கொரோனா பாதிப்புகளால் அல்லல்பட்டு கொண்டிருந்தனர். இந்த நிலையில், தான் பொறுப்பேற்றதும் மருத்துவமனைகள் மற்றும் தாராவி போன்ற ஹாட்ஸ்பாட்களைப் பார்வையிட்ட ஆணையர் சாஹல், மக்களின் பயத்தை தணிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டார்.

கொரோனாவை தடுக்க பல்வேறு உத்திகள் வகுத்து அதனை திறம்பட செயல்படுத்தி வந்துள்ளார். நோயாளிகளின் பரிசோதனை ரிப்போர்ட் ஒப்படைப்பது முதல் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முன்னேற்பாடுகள் செய்தது வரை இவரின் பணிகள் ஏராளம்.

மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டுகளிலும் ஒரு 'வார் ரூம்' என்கிற ரீதியில் தடுப்பு பணிகளின் ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்ததன் விளைவாக தற்போது கொரோனா பாதிப்புகளை வெகுவாக குறைத்திருக்கிறது மும்பை மாநகராட்சி. இதற்கு மாநகராட்சி ஆணையரும், ஆளும் அரசுகளின் ஒத்துழைப்பும் சரியாக அமைந்தது முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

மும்பையின் சிறந்த நிர்வாகத்திறன் காரணமாக கொரோனா பாதிப்புகள் குறைக்கப்பட்டதை அடுத்து, இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் ஆகியவை மாநகராட்சியை வெகுவாக பாராட்டியதோடு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி டி.ஒய் சந்திரசூட், கொரோனா தொடர்பான ஒரு மனுவை விசாரித்தபோது, கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக கையாள மும்பை மாநகராட்சி ஆணையர் சாஹலுடன் பேச மத்திய சுகாதார செயலாளருக்கு நேரடியாக அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com