மருத்துவ மேற்படிப்பு விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு
மருத்துவ மேற்படிப்பில் 50% உள் ஒதுக்கீடு கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
முதுகலை மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையின் போது, எளிதில் செல்ல முடியாத கடினமான பகுதி, தொலைதூரப் பகுதி, மலைப்பகுதிகளின் பணி புரியும் அரசு மருத்துவர்களுக்கு டிப்ளமோ என்று சொல்லப்படுகின்ற பட்டயப்படிப்புகளுக்கு மட்டுமே சலுகை மதிப்பெண் வழங்கவேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனால் மருத்துவ மேல்படிப்பில் பிஜி எனப்படும் பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.
இந்நிலையில் மருத்துவ சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,"மருத்துவ படிப்பில் பட்டய படிப்பு, பட்டப்படிப்பு என பணிபுரியும் பகுதிகளை பாகுபடுத்தி வெயிட்டேஜ் நிர்ணயித்தது தவறு. இந்திய மருத்துவ கவுன்சிலின் அரசாணையில் விதிமுறைகள் மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. அதனால் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் மருத்துவ மேற்படிப்புக்கு மாநிலங்களுக்கு என 50சதவீதம் உள் ஒதுக்கீடு முறையை உறுதி செய்து அதனை மாநில அரசே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்த மனுவானது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்த நிலையில் இன்று இந்த வழக்கில் உத்தரவானது வழங்கப்பட்டது.
மருத்துவ மேற்படிப்பில் 50% உள் ஒதுக்கீடு கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்து, அதன்படி கிராமபுற, மலை பகுதிகளில் பணிபுரியும் தமிழக மருத்துவ மாணவர்களுக்கு மேல் படிப்பில் 50% உள் ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில் எந்த இடைக்கால நிவாரணமும் வழங்கமுடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது . மேலும் இந்த ஆண்டு இந்திய மருத்துவ கழகத்தின் விதிமுறைகள் அடிப்படையிலேயே மேற்படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவித்தனர். இருப்பினும் வழக்கை தொடர்ந்து அரசியல்சாசன அமர்வு விசாரிக்கும் எனவும் கூறினர்.