மருத்துவ மாணவர் சேர்க்கை: முக்கிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

மருத்துவ மாணவர் சேர்க்கை: முக்கிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

மருத்துவ மாணவர் சேர்க்கை: முக்கிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
Published on

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க உத்தரவிடக்கோரி, சிபிஎஸ்இ-யில் படித்த மாணவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

மாணவர்களின் சார்பாக மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் மற்றும் வழக்கறிஞர் அனுஸ்ரீ மேனன் ஆகியோர் ஆஜராகி வாதாட உள்ளனர்.

மாணவர்கள் தங்களது மனுவில், மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு தங்கள் நிலைப்பாட்டை எடுக்காமல் மழுப்பி வந்த நிலையில், தற்போது நீட் தேர்வு அடிப்படையில் அல்லாமல் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுய நிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த முயற்சித்துக் கொண்டிருப்பது, உச்சநீதிமன்றத்தின் முடிவையும், மருத்துவ கவுன்சில் விதி 10டி-ஐ மீறும் செயல் என்று தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்ட வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்களை, தமிழகத்தின் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்களுடன் பேரம் பேசப்பட்டது. இந்த அவசர சட்ட வரைவு மூலம் தமிழகத்திற்கு 2017-18 ஆம் கல்வியாண்டில்  நீட்-ல் இருந்து விலக்கு அளிக்கப்படும். முதல் சுற்று மருத்துவக் கலந்தாய்வை கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் தமிழக அரசு கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது. இதுவரை நீட் தேர்வின் தகுதிப் பட்டியலைக் கூட வெளியிடாமல் மாணவர்களை மாநில அரசு இருளில் தள்ளியுள்ளது என்று கூறியுள்ளனர்.

மேலும் மாணவர்கள் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த அறிவிப்பில், 1997 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிப்படி, இளங்கலை மருத்துவப் படிப்பில் நீட் தேர்வின் அடிப்படையிலேயே முற்றிலும் மாணவர் சேர்க்கை அமைய வேண்டும்.

மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தால், மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்றும் மாணவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்டம் தொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் நேற்று மாலை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com