ரஃபேல் விவகாரத்தில் 'இடைத்தரகர்' - பிரெஞ்சு ஊடகத் தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் சாடல்

ரஃபேல் விவகாரத்தில் 'இடைத்தரகர்' - பிரெஞ்சு ஊடகத் தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் சாடல்
ரஃபேல் விவகாரத்தில் 'இடைத்தரகர்' - பிரெஞ்சு ஊடகத் தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் சாடல்

ரஃபேல் போர் விமானம் கொள்முதலில் இந்தியாவைச் சேர்ந்த ஓர் இடைத்தரகருக்கு 1.1 மில்லியன் யூரோ (ரூபாய் மதிப்பில் 8.61 கோடி) வழங்கப்பட்டதாக, பிரெஞ்சு இணையதள பத்திரிகை தகவல் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அந்த இடைத்தரகர் யார் என்பது குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. இதை மேற்கோள்காட்டி, மோடி அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

பிரெஞ்சு இணையப் பத்திரிகையான 'மீடியா பார்ட்', ரஃபேல் போர் விமானம் கொள்முதல் ஒப்பந்தத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு இடைத்தரகருக்கு 1.1 மில்லியன் யூரோ (ரூபாய் மதிப்பில் 8.61 கோடி) வழங்கப்பட்டதை பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும், இந்தத் தொகையை ரஃபேல் போர் விமானத் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் வழங்கியுள்ளதாகவும், இடைத்தரகருக்கு ரூ.8.62 கோடி வழங்கியதற்கு டசால்ட் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றும் மட்டுமின்றி, அந்த நிறுவனத்தின் மொத்த வரவு - செலவு கணக்கை ஒப்பிடுகையில் அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்தத் தொகையில் பெருத்த வித்தியாசம் இருப்பதாகவும், இதில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் 'மீடியா பார்ட்' செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

50 டம்மி ரஃபேல் மாடலுக்காக கொடுக்கப்பட்ட பணம்தான் இது என்று டசால்ட் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், இந்த டம்மி ரஃபேல் விமானங்களை வாங்கியதற்கான ஆதாரம் எதுவும் டசால்ட் நிறுவனத்திடம் இல்லை. அதோடு பணப் பரிவர்த்தனையில் டம்மி மாடல் என்பதை பற்றி டசால்ட் நிறுவனம் எதுவும் சொல்லவில்லை. மாறாக, இந்தியாவில் இருக்கும் தரகருக்கு அளிக்கப்படும் பரிசு என்று மட்டுமே கூறப்பட்டுள்ளதாக 'மீடியா பார்ட்' செய்தியில் கூறப்பட்டது.

மேலும், போர் விமானங்களின் உற்பத்தியாளரான டசால்ட் ஏவியேஷனுக்கு இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவின் உள் விவாதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஓர் இடைத்தரகர் வழங்கியதாக அந்த ஊடகத் தகவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, தற்போது அந்த இடைத்தரகர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், அகஸ்டாவெஸ்ட்லேண்ட் வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஒப்பந்த வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்த சுஷென் குப்தா தான். இவர் இடைத்தரகர் வேலைக்காக, ரஃபேல் வர்த்தகத்தில் தொடர்புடைய பிரான்ஸ் நிறுவனங்களான டசால்ட் ஏவியேஷன் மற்றும் அதன் துணை நிறுவனமான தேல்ஸ் ஆகியவற்றிடமிருந்து, மில்லியன் கணக்கிலான யூரோக்களை கமிஷனாகப் பெற்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவல்களையும் 'மீடியா பார்ட்' வெளிப்படுத்தியுள்ளது. இந்த குப்தா, ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக நியமிக்கப்பட்ட இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவின் உள் விவாதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து வாங்கி, அதைப் போர் விமானங்களின் உற்பத்தியாளரான டசால்ட் ஏவியேஷனுக்கு கொடுப்பதாக பேரம் பேசி கமிஷன் வாங்கியுள்ளார்; இந்த ரகசிய ஆவணங்கள் மூலமாக, பிரான்ஸ் நிறுவனம் ரஃபேல் விமானங்களின் விலையை, முந்தைய ஒப்பந்தத்தைக் காட்டிலும் அதிகளவில் ஏற்றுவதற்கு உதவியது எனக் கூறப்படுகிறது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பூர்வாங்க விசாரணையைத் இன்னும் தொடங்கவில்லை.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் சமீபத்தில் மோடி அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்திருந்தது. "ரஃபேல் ஊழலில் பணம் எடுத்தவர், ஒப்பந்தத்தில் ஊழல் எதிர்ப்பு பிரிவுகளை நீக்கியவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்களை இடைத்தரகர்களுக்கு கொடுத்தவர் யார் என்று இப்போது தெரிந்துகொள்ளுங்கள்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோர் மத்திய அரசை தாக்கி விமர்சித்திருந்தனர்.

இதேபோல், காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறை பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்ற கட்சியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

``விமான ஒப்பந்தத்தில் குறைந்தபட்சம் ரூ.21,000 கோடி பொது கருவூலத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய தேசத்துரோகம் மற்றும் மிகப்பெரிய ஊழலாக கருதப்படும் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு இதை மறுத்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com