தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஓடி ஒளிகிறேனா? வன்மத்தை கக்காதீர் -  மாயாவதி

தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஓடி ஒளிகிறேனா? வன்மத்தை கக்காதீர் -  மாயாவதி
தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஓடி ஒளிகிறேனா? வன்மத்தை கக்காதீர் -  மாயாவதி

"உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் நான் ஓடி ஒளிந்து வருவதாக சில விஷம ஊடகங்கள் வன்மத்தை கக்கி வருகின்றன" என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் 10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. உத்தரப் பிரதேச தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவி வரும் போதிலும் ஆளும் கட்சியான பாஜகவுக்கும், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் சமாஜ்வாதிக்கும் இடையேதான் கடுமையான போட்டி காணப்படுகிறது. இதற்கிடையே, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இந்த முறை கணிசமான வாக்குகளை பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், இத்தேர்தல் பிரசாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்களை காண முடியவில்லை என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், இதற்கு அக்கட்சியின் தலைவர் மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார். ஆக்ராவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், "உத்தரப் பிரதேச தேர்தல் களத்தில் பகுஜன் சமாஜ் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் பகுஜன் சமாஜுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்த போதிலும், நான் லக்னோவுக்கு சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன். எனது தாயார் இறந்த அடுத்த சில நாட்களிலேயே டெல்லிக்கு சென்று தேர்தல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினேன்.

ஆனால், இங்குள்ள சில ஊடகங்களோ பகுஜன் சமாஜ் மீது சாதிய வன்மத்தை கக்குகின்றன. தேர்தல் பிரசாரத்தில் இருந்து நான் ஓடி ஒளிந்து கொள்வதாக அவை பொய்களை பரப்பி வருகின்றன. பகுஜன் சமாஜ் ஆட்சிக்காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் பல அற்புதமான சாதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, பகுஜன் சமாஜ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இதனை சில ஊடகங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றன. மாநிலத்தில் தற்போதைய பாஜக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பகுஜன் சமாஜுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்" எனக் மாயாவதி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com