பிரசவ கால விடுப்பை உயர்த்தும் மசோதா நிறைவேற்றம்
பிரசவ கால விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்குப் பிரசவ கால விடுப்பு 12 வாரங்களாக, நடைமுறையில் இருந்து வருகிறது. கனடா, நார்வே போன்ற நாடுகளில் இந்த விடுப்பு முறையே, 50 மற்றும் 44 வாரங்களாக உள்ளது. இந்தியாவில் இதை 26 வாரங்களாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. ’மகப்பேறு உதவி திருத்த மசோதா–2016’ என்ற அந்த மசோதா, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
லோக்சபாவில் இந்த மசோதா, நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தாக்கல் செய்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, பெண்களின் பேறுகால விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக (2 குழந்தைகளுக்கு) உயர்த்தப்படும் என்று அறிவித்தார். நான்கு மணி நேரம் நடந்த விவாதத்துக்குப் பிறகு உறுப்பினர்களின் ஆதரவோடு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
10 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தும். இதன் மூலம் சுமார் 18 லட்சம் பெண் பணியாளர்கள் பயன்பெறுவர் என்று அமைச்சர் தத்தாத்ரேயா தெரிவித்தார்.