11 பேர் மர்ம மரணம்: டைரியில் சிக்கிய திக் திக் தகவல்கள்!

11 பேர் மர்ம மரணம்: டைரியில் சிக்கிய திக் திக் தகவல்கள்!
11 பேர் மர்ம மரணம்: டைரியில் சிக்கிய திக் திக் தகவல்கள்!

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் கண்கள் கட்டப்பட்டு தூக்கு மாட்டி இறந்து சம்பவத்தில் ஒரு டைரியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

டெல்லியில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும் வயதான பெண்மணி தரையில் சடலமாகவும் கிடந்துள்ளார். அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். இதனால் இது கொலையா? தற்கொலையா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

டெல்லியின் சண்ட் நகரை சேர்ந்தவர் நாராயணி தேவி (77). இவருக்கு பவனேஷ் (50) மற்றும் லலித் (45) என்ற இரு மகன்கள். பவனேஷின் மனைவி சவிதா( 48), குழந்தைகள் நீது (25), மோனு(23), துருவ் (15) மற்றும் லலித் மனைவி டீனா (42), மகன் சிவம் (15) ஆகியோர் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுடன் நாராயணியின் மூத்த மகள் பிரபீதா( 57) மற்றும் அவரது மகள் பிரியங்கா (33) ஆகியோரும் வசித்து வந்துள்ளனர். பிரபீதாவின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். கூட்டுக்குடும்பமாக வசிந்து வந்தனர்.

பவனேஷ் அப்பகுதியில் பிளைவுட் பிசினஸ் செய்துவந்துள்ளார். அவரது தம்பி லலீத் டிபார்மெண்டல் ஸ்டோர் நடத்தி வந்துள்ளார். லலீத் வழக்கமாக தனது கடையை காலை 5.30 மணிக்கெல்லாம் திறக்கும் வழக்கம் கொண்டவர். ஆனால் நேற்று காலை 7.30 மணியாகியும் கடை திறக்கவில்லை. வழக்கமாக காலையில் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைக்கு சென்றவர்கள் கடைப் பூட்டி இருந்ததையடுத்து வீடு திரும்பியுள்ளனர். இதில் ஒரு பெண்மணி கடை சாத்தியிருப்பது குறித்த தகவலை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த நபர் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். வெளியில் இருந்து சத்தம் போட்டுள்ளார். பிறகு கதவை தட்டியுள்ளார். கதவு திறந்து இருக்கவும் அவர்களது வீட்டிற்குள் பார்த்துள்ளார். வீட்டில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கியிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நபர் அக்கம் பக்கத்தினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் வீட்டை சோதனை செய்தனர். அப்போது பவனேஷ், லலித், சவிதா, நீது, மோனு, துருவ், லலித், டீனா, சிவம், பிரபீதா, பிரியங்கா அகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தனர். நாராயணி தேவியின் உடல் தரையில் கிடந்தது. உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் இந்த குடும்பத்தினருக்கு பண நெருக்கடி போன்ற எந்த பிரச்னையும் இல்லை என தெரியவந்துள்ளது. ஜூன் 30 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பவனேஷ் கடையை சாத்திவிட்டு சென்றதாகவும் அவரது சகோதரர் லலித் இரவு 10 மணிக்கு அவரது கடையை அடைத்துவிட்டு சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை இவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மர்மமான மரணம் நள்ளிரவில் தான் அரங்கேறியிருக்கும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

வீட்டில் நடத்திய சோதனையில் ஒரு டைரி கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது.  “மனித உடலானது தற்காலிகமானது, கண்களையும் வாயையும் மறைப்பதன் மூலம் பயத்தை வெல்ல முடியும்” என அதில் எழுதப்பட்டிருந்ததாக காவலர்கள் தெரிவித்தனர். மேலும் அனைவரும் கண்களை கட்டிக்கொள்ளுங்கள்.. ஒன்றுமில்லை. ஆனால் மேலே உள்ளது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா.. துப்பட்டா அல்லது புடவையை கயிறாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆலமரத்தை ஏழு நாட்கள் பயபக்தியுடன் வழிபடுங்கள். யாராவது வீட்டிற்கு வந்தால் அடுத்தநாள் அதனை செய்யுங்கள். இதனை செய்ய வியாழன் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்வு செய்யுங்கள். வயதானவர்களால் நிற்க முடியாது என்றால் வேறோரு அறையில் கீழே படுத்துக்கொள்ளலாம். என எழுதப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், இந்த டைரியை படித்ததில் இந்தக் குடும்பத்தை சேர்ந்த யாரோ மூன்று பேர் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் அதன் பின்னர் குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வீட்டில் மாடியில் இருந்து அவர்களது வளர்ப்பு நாய் கண்டெடுக்கப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட மூவர் யார்? யார், யாரை கொலை செய்தனர். கண்கள் மற்றும் வாயை கட்டி தூக்கில் மாட்டியது யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.இரவு உணவில் மயக்கமருந்து கலந்து கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.  நாயை மாடியில் கொண்டுபோய் விட்ட நபரின் கைரேகையை சேகரித்துள்ளோம். இதனை ஆய்வு செய்த பின்னர் தான் யார் என்ற தகவல் தெரியவரும். வீட்டில் இருந்தவர்களின் மொபைல் போன் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக யாருடன் பேசினார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறோம் அதன் பின்னரே இவ்வழக்கில் முழுவிவரமும் தெரியவரும் என்றனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com