‘நீங்கள் வெளிநாட்டவர்’ - பாஜக நிர்வாகிக்கு அதிர்ச்சி அளித்த அசாம் பதிவேடு
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிக்கு, வெளிநாட்டவர் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அசாமில், பங்களாதேஷை சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஊடுருவி வருவதால் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டு இருந்தன. மேலும் 37 லட்சம் பெயர்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தன. இரண்டு லட்சம் பெயர்கள், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டன.
இந்நிலையில், ஜூலை 26 ஆம் தேதி வெளியிடப்பட்ட நீக்கப்பட்டவர்களுக்கான பட்டியலில் அசாமை சேர்ந்த பாஜக தலைவர் ஒருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அசாமின் சில்சார் நகரைச் சேர்ந்தவர் பவன் குமார் ரதி. 56 வயதான இவர் சில்சார் பகுதியின் முக்கியமான பாஜக நிர்வாகி. இவரது குடும்பம் ராஜஸ்தான் மாநிலம் பீகேனர் மாவட்டத்தில் இருந்து சுதந்திரத்திற்கு முன்பே அசாமில் குடியேறிவிட்டது. 75 ஆண்டுகளுக்கு மேலாக அசாமில் அவரது குடும்பத்தினர் இருந்து வரும் நிலையில், அவருக்கு வெளிநாட்டவர் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரதி கூறுகையில், “நான் 1963 ஆம் ஆண்டு சில்சாரில் பிறந்தேன். தேசிய குடிமக்கள் பதிவேடு அலுவலகத்தில் இருந்து இப்படியொரு நோட்டீஸ் வந்தது எனக்கு அதிர்ச்சி அளித்தது. ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ஆவணங்களை நான் இணைத்துள்ளேன். அப்படியிருந்தும் என்னுடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஆவணங்களில் தவறுகள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்” என்றார். மார்வாரி சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படி வெளிநாட்டவர் ஆக முடியும் என பஞ்சாயத்து தலைவர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.