திருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..!

திருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..!

திருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..!
Published on

விரைவில் விருப்ப ஓய்வு பெற்று வயதான பெற்றோர்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள திட்டமிட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரரான குருவும், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்றுமுன் தினம் 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் பயணம் செய்தனர். புல்வாமா மாவட்டத்தில் அவர்கள் வாகனம் வந்தபோது, வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 40 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் தான் கர்நாடகா மாநிலம் மத்தூர் அருகில் உள்ள குடிகிரி கிராமத்தை சேர்ந்த குரு.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த குரு, கடந்த 2011-ஆம் ஆண்டு நாட்டை காப்பதற்காக சிஆர்பிஎஃப் பணியில் சேர்ந்துள்ளார். குருவின் பெற்றோர்களான கொன்னையா- சிக்கோலம்மா தம்பதி துணிகளை சலவை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர்தான் கலாவதி என்ற பெண்ணுடன் குருவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதுதவிர குருவிற்கு இரண்டு தம்பிகளும் உள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன் குடும்பத்தை பார்ப்பதற்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார் குரு. அங்கு மனைவி, தம்பி, அம்மா, அப்பா என அனைவரிடத்திலும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய நாளே, அவரின் கடைசி நாளாகவும் அமைந்துவிட்டது. ஆம். விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு சென்ற நாளிலே தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு குரு உயிரிழந்துள்ளார். அவரின் மறைவு செய்தி கேட்டு பெற்றோர்கள், உறவினர்கள் மட்டுமில்லாமல் ஊரே சோகத்தில் மூழ்கியுள்ளது. மரண செய்தியை கேட்ட குருவின் தம்பி மயக்கத்தில் விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து குருவின் நண்பரான மூர்த்தி கூறும்போது, “ சமீபத்தில் தான் சொந்த ஊரில்வீடு கட்டினான். குருவின் விருப்பமே விருப்ப ஓய்வு பெற்று வயதான பெற்றோரை சொந்த கிராமத்தில் இருந்து கவனித்துக் கொள்வதுதான். ஆனால் இப்போது பெற்றோரை தனியாக விட்டுவிட்டு நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்துவிட்டான்” என தெரிவித்தார்.

குருவின் உடல் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருக்கும் வேளையில், உடலை அடக்கம் செய்யக் கூட அவரது குடும்பத்தினருக்கு இடம் இல்லை. இதனையடுத்து அரசு அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள அரசு நிலத்தின் சிறு பகுதியை குருவின் உடலை அடக்கம் செய்ய ஒதுக்கியுள்ளனர். இதனிடையே உயிரிழந்த குருவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். அவரின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com