மனைவியுடன் கட்டாய தாம்பத்ய உறவு குற்றமாகாது: சுப்ரீம் கோர்ட்
மனைவியுடன் கட்டாய தாம்பத்ய உறவு கொள்வது பாலியல் வன்முறைக் குற்றமாகாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்திய தண்டனை சட்டம் 375வது பிரிவில், 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் வலுக்கட்டாயமாக தாம்பத்ய உறவு கொள்வது பாலியல் வன்முறை குற்றம் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரிவு, அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று அறிவிக்கக்கோரி, தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்களின் விருப்பத்துக்கு மாறாக, அவர்களுடன், கணவன்மார்கள் கட்டாயமாக தாம்பத்ய உறவு கொள்வதை பாலியல் வன்முறை குற்றம் ஆக்கலாமா என்பது பற்றி பாராளுமன்றம் விவாதித்தது. இறுதியில், அது குற்றம் அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளது. ஆகவே, அது கிரிமினல் குற்றம் அல்ல’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ‘18 வயதுக்கு குறைவான இளம்பெண்கள், தங்கள் காதலருடன் பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டாலும், அந்த ஆண் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்து, 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பது கடுமையானது’ என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.