\
supreme court
supreme courtpti

Marital Rape குற்றமா? ’நீங்க அதை முடிவு செய்ய முடியாது..’ உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு பதில்!

திருமண உறவில் மனைவியின் விருப்பத்திற்கு மாறான பாலியல் உறவு குற்றமா என்ற வழக்கில், தனிநபர் உரிமை, பெண்களின் உடல் மற்றும் பாலியல் சுதந்திரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தீவிர சட்ட விவாதம் நடைபெற்றது.
Published on
Summary

திருமண உறவுக்குள் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக நடைபெறும் பாலியல் உறவை குற்றமாக்க வேண்டும் என்ற மனுக்களுக்கு, 3 வாரங்களில் இறுதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதை குற்றமாக்குவது நாடாளுமன்றத்தின் அதிகாரம், நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்று மத்திய அரசு வாதித்தது. திருமணம் பெண்ணின் சுதந்திரத்தை அழிக்க முடியாது என நீதிபதி ஜாய்மால்யா பாக்சி கருத்து தெரிவித்தார்.

செய்தியாளர் - M. மீரா

திருமண உறவுக்குள் நடைபெறும் பாலியல் வன்கொடுமையை (Marital Rape) குற்றமாக்குவது தொடர்பான வழக்குகளின் இறுதி விசாரணையை 3 வாரங்களுக்குப் பிறகு தொடங்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

திருமண உறவுக்குள் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக நடைபெறும் பாலியல் உறவை குற்றமாகக் கருத வேண்டும் எனக் கோரி பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

parliament
parliament PT-WEB

இந்நிலையில், புதன்கிழமை (இன்று) நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசு தனது நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. திருமண வன்கொடுமையை குற்றமாக்குவது தொடர்பான முடிவு நாடாளுமன்றம் மற்றும் அரசின் கொள்கை சார்ந்த அதிகார வரம்புக்குள் வருவதாகவும், இதனை உச்சநீதிமன்றம் தீர்மானிப்பது பொருத்தமானதல்ல என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதாவது, தற்போதுள்ள சட்டங்களில் மாற்றம் செய்து திருமண வன்கொடுமையை தனிக் குற்றமாக வரையறுப்பது நாடாளுமன்றத்தின் பணியாகும் என மத்திய அரசு வாதிட்டது. இதுபோன்ற முக்கியமான சமூக மற்றும் சட்ட மாற்றத்தை நீதிமன்றத்தின் மூலம் மேற்கொள்வதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, நீதிபதி ஜாய்மால்யா பாக்சி முக்கியமான கருத்தை முன்வைத்தார். திருமணம் என்பது ஒரு பெண்ணின் சுதந்திரத்தை முற்றிலும் அழிப்பதாக இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

திருமணம் செய்து கொண்டதன் காரணமாக ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம், உடல் மீதான உரிமை மற்றும் முடிவெடுக்கும் சுதந்திரம் முடிவுக்கு வந்துவிடாது என்பதே இந்தக் கருத்தின் அடிப்படை.

இந்த வழக்கில் தனிநபர் உரிமை, திருமண உறவின் தன்மை, பெண்களின் உடல் மற்றும் பாலியல் சுயாட்சி, குற்றவியல் சட்டத்தின் வரம்பு உள்ளிட்ட பல முக்கியமான சட்ட மற்றும் சமூகக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை 3 வாரங்களுக்குப் பிறகு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

supreme court
டெல்லியில் பிரிக்ஸ்-ன் 18 வது உச்சி மாநாடு.. 20 ஆண்டுகளாக தொடரும் பயணம்.. கவனம் பெறும் சந்திப்பு!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com