எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிப்பு! யார் இவர்?

எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிப்பு! யார் இவர்?

எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிப்பு! யார் இவர்?
Published on

உள்ளாட்சியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று முன்மொழிந்த மார்கரெட் ஆல்வா எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

தற்போதைய குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநராக ஜெகதீப் தங்கர் நேற்று அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிட உள்ளார். டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற ஆலோசனைக்கு பின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக அணி சார்பில் ஜெகதீப் தங்கரும் எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் களமிறங்குகின்றனர்.

யார் இந்த மார்கரெட் ஆல்வா?

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த மார்கரெட் ஆல்வா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். சட்டம் படித்த பின் இந்திரா காந்தி தலைமையில் இயங்கிய காங்கிரஸின் தன்னை இணைத்துக் கொண்டார் மார்கரெட். 1975 முதல் 1977 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இணைச் செயலாளராகவும், 1978 முதல் 1980 வரை கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.

ஏப்ரல் 1974 இல், காங்கிரஸின் பிரதிநிதியாக ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மார்கரெட். பின்னர் 1980, 1986 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் மேலும் மூன்று முறை ராஜ்ய சபாவிற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ராஜ்யசபாவில் உறுப்பினராக இருந்த காலத்தில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான துறை மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒரு பிரிவான இளைஞர் மற்றும் விளையாட்டு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகங்களில் மத்திய இணை அமைச்சராக பணியாற்றினார்.

1985 மற்றும் 1989 க்கு இடைப்பட்ட காலத்தில், மார்கரெட் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் ஈடுபாட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கத்தின் 28 அம்சத் திட்டத்தை மேற்பார்வையிட்டார். அரசாங்கத்திலும் அவரது கட்சியின் அதிகாரப்பூர்வ பதவிகளிலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார் மார்கரெட். உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று 1989 ஆம் ஆண்டு மார்கரெட் வைத்த முன்மொழிவு 1993 இல் சட்டமாக மாறியது.

நவம்பர் 2008 இல் கர்நாடகாவில் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் இடங்கள் ஏலதாரர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன என்று கடும் விமர்சனத்தை முன்வைத்தார். காங்கிரஸ் இதை மறுத்து அறிக்கை வெளியிட்ட நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்தார் ஆல்வா. இருப்பினும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த போது, ஆகஸ்ட் 6, 2009 அன்று, உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டார் மார்கரெட். இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்தார் மார்கரெட். 2014 ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து விலகியிருந்த மார்கரெட், தற்போது குடியரசு துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com