marathi ssc results 80803 fail first language paper in maharashtra
மகாராஷ்டிராஎக்ஸ் தளம்

மகாராஷ்டிரா | 10-ஆம் வகுப்பு மராத்தி முதல் மொழித் தேர்வு.. 80,000-க்கும் மேற்பட்டோர் தோல்வி!

சமீபத்தில் மத்திய அரசால் மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கும் வேளையில், இந்த தோல்வி விகிதம் கல்வி வல்லுநர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மகாராஷ்டிர இடைநிலைப் பள்ளிச் சான்றிதழ் (SSC) நடப்பாண்டுத் தேர்வுகளில், 80,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மராத்தி முதல் மொழித் தாளில் தோல்வியடைந்திருப்பது கவலைகளை எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளது. அவ்வரசு, மராத்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மே 1ஆம் தேதி முதல் டாக்ஸி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் உரிமத்தை தக்கவைக்க மராத்தி மொழித் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிர இடைநிலைப் பள்ளிச் சான்றிதழ் (SSC) நடப்பாண்டுத் தேர்வுகளில், 80,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மராத்தி முதல் மொழித் தாளில் தோல்வியடைந்திருப்பது கவலைகளை எழுப்பியுள்ளது.

தேர்வுத் தரவுகளின்படி, மராத்தி முதல் மொழித் தாளுக்கு 10,98,623 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களில், 10,06,896 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதன் மூலம், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 92.57 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், 80,803 மாணவர்கள் இப்பாடத்தில் தோல்வியடைந்துள்ளனர்.

மேலும், 4,13,917 மாணவர்கள் மராத்தியை இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாக எடுத்திருந்தனர். அவர்களில், 13,741 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மொத்தத்தில், SSC தேர்வுகளில் அனைத்துப் பிரிவுகளிலும் சுமார் 94,544 மாணவர்கள் மராத்தி மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. சமீபத்தில் மத்திய அரசால் மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கும் வேளையில், இந்த தோல்வி விகிதம் கல்வி வல்லுநர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநில மொழித் தேர்வில் கிட்டத்தட்ட 8 சதவீத மாணவர்கள் தோல்வியடையும்போது, ​​அதை ஒரு தனிப்பட்ட கல்விப் பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது என்று கல்வி வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், இப்பிரச்னை என்பது மாணவர்கள் மொழியை நிராகரிப்பது பற்றியது அல்ல. மாறாக, பள்ளிகளில் மொழிகள் கற்பிக்கப்படும் விதம் பற்றியது என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர். மொழியானது இலக்கியம், உரையாடல் மற்றும் கலாசாரத்துடன் தொடர்பில்லாமல், தேர்வை மையமாகக் கொண்டதாக மாறிவிட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். இன்னொரு புறம், ஆங்கிலமும் இந்தியும் தகவல் தொடர்பின் பிரதான மொழிகளாகப் பெருகி வருவதும், மராத்தி மொழிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com