Madvi Hidma
மாட்வி ஹிட்மாx

மாவோயிஸ்ட் முக்கியத் தளபதி ஆந்திராவில் சுட்டுக் கொலை... யார் இந்த மாட்வி ஹிட்மா ?

இந்தியாவின் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தளபதியும், 26 கொடூரத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான மாட்வி ஹிட்மா, ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Published on

”மாவோயிஸ்டுகளுக்கான இறுதி யுத்தம் தொடங்கிவிட்டது. 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மாவோயிஸ்டுகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கும் நிலையில், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, தெலங்கானா, ஜார்கண்ட் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 350க்கும் மேற்ப்பட்ட மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், 836 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் மேலும் 1,639 பேர் வன்முறைப் பாதையைத் தவிர்த்து, அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், சரண் அடைந்து உள்ளனர் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

Madvi Hidma
மாவோயிஸ்டுகள்pt wev (file image)

இந்நிலையில் இன்று காலை ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உள்ள மாரேடும்மில்லி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இந்தியாவின் மிகவும் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தளபதி 43 வயதான மாட்வி ஹிட்மா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும், இந்த தாக்குதலில் ஹிட்மா மற்றும் அவரது இரண்டாவது மனைவி ராஜி (ராஜக்கா) உட்பட ஆறு மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கரில் இருந்து தப்பியோடும்போது, ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

யார் இந்த மாட்வி ஹிட்மா ?

1981 ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் சுக்மாவில் மாவட்டத்தில் பிறந்த ஹிட்மா, மாவோயிஸ்டுகளின் மிகக் கொடிய தாக்குதல் பிரிவான மக்கள் விடுதலை கெரில்லா இராணுவம் (PLGA) - பட்டாலியன் எண் 1 இன் தலைவராக இருந்தார். மேலும், இவர் சிபிஐ (மாவோயிஸ்ட்) மத்திய குழுவின் இளைய உறுப்பினர் ஆவார். பஸ்தார் பிராந்தியத்திலிருந்து குழுவில் இணைந்த ஒரே பழங்குடியினர் இவர்தான். தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு எதிராக நடந்த 26 தாக்குதல்களுக்கு ஹிட்மா மூளையாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது. இதில், 2010 ஆம் ஆண்டு 76 சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்கள் கொல்லப்பட்ட தண்டேவாடா தாக்குதல். 2013 ஆம் ஆண்டு ஜிராம் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதல், இதில், காங்கிரஸ் உயர் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 2021 சுக்மா-பிஜாப்பூர் மோதல், இதில் 22 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.

மாட்வி ஹிட்மா
மாட்வி ஹிட்மாfacebook

இவ்வாறு, ஹிட்மாவின் இராணுவ உத்தி மற்றும் கொரில்லா போர் திறன்கள், அவரை மிகவும் ஆபத்தான மாவோயிஸ்ட் தளபதிகளில் ஒருவராக ஆக்கியது. அவரது அனுபவம், புத்திசாலித்தனம் மற்றும் காட்டு நிலப்பரப்பு பற்றிய ஆழமான அறிவு ஆகியவை காரணமாக, அவர் பாதுகாப்புப் படையினரால் மிகவும் ஆபத்தானவராகக் கருதப்பட்டார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா நவம்பர் 30-ஆம் தேதிக்குள் ஹிட்மாவைக் கொல்ல பாதுகாப்புப் படையினருக்கு அவர் காலக்கெடு விதித்திருந்தார். மேலும், ஹிட்மாவை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான், இன்று காலை மாட்வி ஹிட்மா பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com