கடந்த வருடம் சென்னை மற்றும் தென் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தைபோல, இவ்வருடம் அதீத கனமழையானது ஆந்திராவை ஆட்டம் காண வைத்துள்ளது.
பெரும்பாலும் புயல் கரையை கடக்கும் பகுதியாக ஆந்திரா இருக்கும் என்பதால், அதற்காக தயார் நிலையில் அம்மாநில அரசாங்கமும் மக்களும் இருந்துவருவார்கள். ஆனால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடந்த சில தினங்களாக இந்த பெருமழை பெய்துவருகிறது. இதனால் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது அரசாங்கமும் மக்களும் ஆட்டம்கண்டுள்ளனர்.
கனமழை காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மழையால் பல இடங்களில் மற்றும் சாலைகளில் நீர் மட்டமானது 8 அடி வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரயில் நிலையங்களில் தண்டவாளங்கள் தெரியாதபடி வெள்ளம் சூழ்ந்துள்ளன. இதனால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு மத்திய ரயில்வே துறை, விஜயவாடா கோட்டத்தில் 140 ரயில்களை ரத்து செய்துள்ளது. 97 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
அம்மாநிலங்களில் உள்ள நீர் நிலைகளும், அனைத்து ஆறுகளும் நிரம்பி வழிவதால், மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் NDRF குழுக்கள் மீட்புப்பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் வரும் நாட்களில் இரு மாநிலங்களிலும் மழை தொடரும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இரு மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசி உள்ளனர். தெலங்கானாவில் மழைக்கு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும் மூன்று பேர் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் அரசு உறுதி செய்துள்ளது. மகபூபாபாத், கம்மம், சூர்யாபேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஆந்திராவில் மழைக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்ரீகாகுளம், அல்லூரி சீதாராம ராஜூ, விஜயநகரம், பார்வதிபுரம், காக்கி நாசா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்னும் மழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 17,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 107 நிவாரண முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.