ட்ரம்ப் வந்திருக்கும்போது வைரலாகும் ஒபாமாவின் காந்தி பற்றிய குறிப்பு... ஏன் தெரியுமா?
கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, டெல்லியிலுள்ள காந்தியின் நினைவிடத்தில் எழுதிய வாசகம் தற்போது பகிரப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவான்கா ட்ரம்ப் ஆகியோரும் வந்துள்ளனர். பகல் 11.40 மணியளவில் அகமதாபாத் விமான நிலையம் வந்த ட்ரம்ப்பை இந்திய பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் அவரது மனைவி மற்றும் மகளை கைக்குலுக்கியும் வரவேற்றார். இதையடுத்து அங்கிருந்து ட்ரம்ப்பும், மெலனியாவும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் ட்ரம்ப் தனது கருத்துகளைப் பதிவிட்டார். அந்தப் பதிவேட்டில் ட்ரம்ப், “இந்த அற்புதமான பயணத்திற்கு ஏற்பாடுகளை செய்த இனிய நண்பர், பிரதமர் மோடிக்கு நன்றி” என எழுதியுள்ளார். மெலனியாவும் அதற்கு கீழே கையெழுத்திட்டார்.
இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கடந்த 2015ஆம் ஆண்டு காந்தியின் நினைவிடத்தில் எழுதிய வாசகம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பதிவேட்டில் ஒபாமா “ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் சொன்னது இன்றும் உண்மையாகவே உள்ளது. காந்தியின் உணர்வு இந்தியாவில் இன்றும் உயிருடன் இருக்கிறது. அது உலகிற்கு ஒரு பெரிய பரிசாகவே உள்ளது. எல்லா தேசங்கள் மற்றும் எல்லா மக்களிடையேயும் நாம் எப்போதும் அன்பு மற்றும் அமைதியின் உணர்வைப் பகிர்ந்துகொண்டு வாழ்வோம்” எனக் கூறியிருந்தார். ட்ரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், ஒபாமாவின் அன்றைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.