
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடம் 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. பிரதமரின் இந்த உரை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்திய தூதரகம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, இந்தியா முழுவதும் பிரதமரின் இந்த 100-வது `மன் கி பாத்' உரையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக, பா.ஜ.க-வினர் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்தனர். கட்சி அலுவலகங்கள், பொதுமக்கள் திரளாகக் கூடும் இடங்களில் எல்.இ.டி திரைகள் மூலம் பிரதமர் உரையை ஒளிபரப்பினர்.
100-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ''100-வது மன் கி பாத் நிகழ்ச்சிக்காக நீங்கள் அனைவரும் என்னை வாழ்த்தி இருக்கிறீர்கள். மன் கி பாத் நிகழ்ச்சியானது லட்சக்கணக்கான இந்தியர்களின் மனதின் குரல் மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடு ஆகும். நமது குடிமக்களின் ஆளுமைக்கான நிகழ்ச்சி இது. இதில் நாம் நேர்மறையான விஷயங்களை கொண்டாடுவதுடன், இந்நிகழ்ச்சியில் மக்களும் பங்கேற்கின்றனர்.
இயற்கை வளங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இயற்கை வளங்களான நீர்நிலைகள், மலைகள், புனிதத் தலங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இயற்கை வளங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை மேம்படும். வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு முன்பு நம் நாட்டில் உள்ள 15 இடங்களுக்கு நாம் செல்ல வேண்டும். இந்த 'மன் கி பாத்' நிகழ்ச்சி நாம் என்ற சிந்தனைையை எனக்கு கொடுத்துள்ளது'' என்று பேசினார்.
2014இல் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, அந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பிரதமர் மோடி தன்னுடைய முதல் `மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதுமுதல் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடம் வானொலி மூலம் `மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார்.