"மணீஷ் பாஜகவில் சேர்ந்தால் நாளையே விடுதலையாவார்".. அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்!

"மணீஷ் பாஜகவில் சேர்ந்தால் நாளையே விடுதலையாவார்".. அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்!
"மணீஷ் பாஜகவில் சேர்ந்தால் நாளையே விடுதலையாவார்".. அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்!

”மணீஷ் சிசோடியா உடனே பா.ஜ.க-வில் இணைந்தால், நாளையே விடுதலையாகி விடுவார்” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோரின் ராஜினாமாவால் டெல்லி அரசுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. தற்போது அவர்கள் வகித்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மணீஷ் சிசோடியாவின் கைதுக்குப் பிறகு டெல்லி முதல்வர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதன் மூலமாக, டெல்லி அரசின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் பா.ஜ.க. தீங்கிழைக்க நினைக்கிறது. அதாவது, மதுபான கொள்கைகளில் ஊழல் என்பதை பாஜக ஒரு கருவியாக வைத்திருக்கிறது. அவ்வளவுதான். அவர்கள் கண்ணோட்டம்படி, ஊழல் ஒரு பிரச்சினை அல்ல; அமைச்சர்கள் செய்த சிறந்த செயல்களை நிறுத்துவதே இதன் நோக்கம். பா.ஜ.கவின் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், சிசோடியாவின் வீட்டிலோ அல்லது அவரது வங்கிக் கணக்குகளிலோ எந்தப் பணத்தையும் சிபிஐ அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதேநேரத்தில், மணீஷ் சிசோடியா உடனே பா.ஜ.க-வில் இணைந்தால், நாளையே விடுதலையாகி விடுவார். ஆம் ஆத்மியின் வளர்ச்சியை பா.ஜ.க. தடுக்க நினைக்கிறது. ஆம் ஆத்மி பஞ்சாப்பில் வெற்றிபெற்றதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆம் ஆத்மி அமைச்சர்கள் சிறந்த திட்டங்கள் மூலம் இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், குஜராத்தில், ஆம் ஆத்மி ஆட்சியைப் போன்று சிறந்ததாக மாற்ற முடியவில்லை. இது நடக்காது என டெல்லி மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அதேநேரத்தில், டெல்லியின் இந்த பணி தொடரும்” எனப் பேசினார்.

டெல்லி அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி, இதுவரை 36 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 26ஆம் தேதி டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ செய்தது. அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த சூழலில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். கல்வி, பொதுப்பணி, நிதி உட்பட 18 துறைகளின் பொறுப்பை மணீஷ் கவனித்து வந்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் நிர்வகித்து வந்த துறைகள் கூடுதலாக வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதுபோல், ஹவாலா பண மோசடி வழக்கில் கைதான டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய துறையும் வேறு அமைச்சருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com