மணிப்பூர் கலவரம்: பார்வையிடச் சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்? மீண்டும் நடந்த வன்முறையில் 3 பேர் பலி!

மணிப்பூர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
மணிப்பூர் கலவரம், ராகுல் காந்தி
மணிப்பூர் கலவரம், ராகுல் காந்திtwitter

மணிப்பூரில் மெய்டீஸ் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு குக்கி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக தீ வைப்பு உள்ளிட்ட வன்முறை நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன.

நிவாரண முகாம்களில் மணிப்பூர் மக்கள்
நிவாரண முகாம்களில் மணிப்பூர் மக்கள்ani

ஒன்றரை மாத காலத்துக்கும் மேலாக கலவரம் நீடித்துவரும் நிலையில், கலவரங்களால் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி அண்டை மாநிலங்களிலும், நிவாரண முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். 4 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் தாக்கப்பட்டுள்ளன.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாகச் சாடி வருகின்றன. இதற்கிடையே 10 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் கலவரம் தொடர்பாகக் கடிதம் எழுதியிருந்தன. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுதொடர்பாக அனைத்துக் கட்சிகளும் அழைப்பு விடுத்திருந்தார். இக்கூட்டம் கடந்த 24ஆம் தேதி கூடியது. பிரதமர் மோடி இக்கூட்டத்தில் பங்கேற்காததால் காங்கிரஸும் கலந்துகொள்ளவில்லை. அதேநேரத்தில் மணிப்பூரின் முன்னாள் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் கலந்துகொண்டு 8 அம்சங்கள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார்.

அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்twitter

மேலும் இதில் பங்கேற்ற எதிர்க்கட்சியினர், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக கட்சிகள் தங்கள் கருத்துகளை எடுத்துக்கூறின. மேலும், மணிப்பூருக்கு அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்ப கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தலைவர்கள் தெரிவித்தனர். பின்னர் இதைத் தொடர்ந்து அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, மணிப்பூர் கலவரம் குறித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பதாக இருந்தது. இதற்காக அவர் இன்று மணிப்பூர் சென்றார். மணிப்பூரின் கராசந்த்பூருக்குச் செல்ல முயன்ற ராகுல் காந்தியை பிஷ்ணபூரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து , காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து , கட்சி தொண்டர்களும், அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மேகசந்திரா ஆளும் பாஜகவை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர், ”ராகுலை வரவைப்பதற்காக சாலைகளில் பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர். ஆனால் காவல்துறை ராகுலின் காரை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இது முதல்வரின் உத்தரவின் பேரில் நடைபெறுகிறது என தெரிகிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை என ராகுல் உட்பட எங்களை உள்ளே ஆரம்பிக்க மறுக்கின்றனர். இதை அரசியலாக்குகிறார்கள்” என குற்றம்சாட்டியுள்ளார்.

தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல்
தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல்twitter

ராகுல் காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாகத் தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் காவல் துறை தடுத்து நிறுத்தியதை அடுத்து, ராகுல் காந்தி இம்பால் திரும்பினார்.

இதற்கிடையே மணிப்பூரில் அங்கு நிலைமையை சீர்செய்ய மக்களே முன்வந்து சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மணிப்பூரின் வடக்கு இம்பால் பகுதிக்கு உள்ளே வரும் வாகனங்களை, அப்பகுதி பெண்களே தணிக்கை செய்து வருகின்றனர். வாகனத் தணிக்கையில் ஈடுபடும் பெண்கள், ஊருக்குள் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுகின்றனர்.

வாகனங்களைச் சோதனையிடும் பெண்கள்
வாகனங்களைச் சோதனையிடும் பெண்கள்PT web

குக்கி இனத்தவரிடமிருந்து தற்காத்துக்கொள்ள மெய்டீஸ் இனப்பெண்கள், சோதனை வாகனங்களில் ஆயுதங்கள் இருக்கின்றனவா என சோதிக்கின்றனர்.

இரண்டு நாட்களாக அமைதி நிலவி வந்த நிலையில், தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காம்போடி பகுதியில் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தலைநகர் இம்பாலில் உள்ள மருத்துவமனையை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊரில் உள்ள பெண்கள் திரண்டு குழுவாக இணைந்து இந்தச் சோதனையை நடத்துகின்றனர்.

மணிப்பூரின் தற்போதைய நிலைமை குறித்து ஐஐஐடி மணிப்பூர் இயக்குநர் கிருஷ்ணன் பாஸ்கர், ”மணிப்பூர் வளாகம் அரண்மனைபோல் பாதுகாப்பாக உள்ளது. ஐஐஐடி மணிப்பூர் வளாகத்தின் மூன்று புறமும் அரண்போல் ஆறு பாய்கிறது. மணிப்பூர் வளாகத்தில் எந்த வன்முறையும் நிகழவில்லை. மணிப்பூரில் மாணவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான சூழலே உள்ளது. பெற்றோரின் அச்சம் காரணமாக மாணவர்களை ஊருக்கு அனுப்பினோம். வரும் நாட்களில் கலவரத்தின் வடுக்கள் ஆறிவிடும் என நம்புகிறேன். விரைவில் இயல்பு நிலை திரும்பும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பிருந்தா, “மணிப்பூரின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. மணிப்பூர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பயங்கரமான வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. மணிப்பூரின் மாநில அரசு, மத்திய அரசுகளாலும் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. வன்முறைகள் கட்டுக்குள் வந்துவிட்டது என்றால் மணிப்பூரில் தங்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேறிய மக்கள் தங்களது பகுதிகளுக்கு மீண்டும் திரும்பி இருக்க வேண்டுமல்லவா? மக்கள் யாரும் தங்கள் பகுதிகளுக்கு திரும்பவில்லை.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பிருந்தா
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பிருந்தாபுதிய தலைமுறை

எனவே வன்முறை கட்டுக்குள் வரவில்லை என்பதே உண்மை. மணிப்பூரில் வன்முறைகள் பலநாட்களாக நடந்து வரும் சூழலில் அதை கட்டுக்குள் கொண்டு வர அரசு தாமதப்படுத்துவது ஏன்? இது போன்ற வன்முறைகள் நாட்டின் வேறு எந்த பகுதிகளிலும் நடந்ததில்லை. மாநிலம் முழுவதும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிள்ளது. மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து அமைதி காப்பது ஏன்?

மணிப்பூர் கலவரத்திற்கு மாநில அரசு தான் முழுக் காரணம். மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சீர் குலைந்தால் மாநில அரசு தான் அதற்கு முழு பொறுப்பு. எனவே உள்துறை அமைச்சகத்தை தன்னிடம் வைத்துள்ள மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சர் தான் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com