
மணிப்பூரில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைப் பட்டியலிட்டு பிரதமருக்கு மனித உரிமைகளுக்கான குக்கி மகளிர் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. காவல்துறை மற்றும் முதலமைச்சர் மீதும் அந்த அமைப்பு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மணிப்பூரில் வன்முறை வெறியாட்டங்களுக்கு இடையே அடுத்தடுத்து வெளியாகும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மனதை உலுக்குவதாக இருக்கின்றன. இந்தச் சூழலில் மணிப்பூரில் உள்ள மனித உரிமைகளுக்கான குக்கி மகளிர் அமைப்பு, கடந்த 20ஆம் தேதி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது.
மே 4ஆம் தேதியன்று இரண்டு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் எஃப்.ஐ.ஆரை மறைத்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக எஸ்.பி. செயல்பட்டதாகவும், குறிப்பாக கொடூரம் நடந்த பகுதியின் நோங்போக் செக்மாய் காவல் நிலையத்தின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காவல் நிலையம் 2020ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த காவல் நிலையம் என்ற விருதை பெற்றது வியப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளனர். அதோடு 10 நிகழ்வுகளையும் குக்கி மகளிர் அமைப்பு பட்டியலிட்டுள்ளது.
கிழக்கு இம்பாலில் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை, மொய்ரான், காங்போக்பியில் குழந்தைகள் கொலை, கர்ப்பிணிப் பெண் மரணம், கோங்சாய் வெங்கில் கணவன் முன்னே பெண் பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரங்கள் இதில் இடம்பிடித்துள்ளன. ஆம்புலன்சில் தாய், மகன் எரித்துக்கொலை, இம்பாலில் ஒரு குடும்பமே சுட்டுக்கொலை, கோகன் கிராமத்தில் பிரார்த்தனையின்போது பெண் சுட்டுக்கொலை, மூதாட்டி சுட்டுக்கொலை, பிஷ்ணுர் மாவட்டத்தில் ஒரு குடும்பம் எரித்துக்கொலை ஆகிய கொடூர நிகழ்வுகளையும் அந்த அமைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
1. கிழக்கு இம்பாலில் கார் பழுதுநீக்கும் நிலையத்தில் 2 குக்கி இன பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை
2. மொய்ரானில் 2 வயது குழந்தை கொலை
3. காங்போக்பி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தை கொலை
4. சந்தேல் மாவட்டம் திங்கங்பாயின் காட்டில் கர்ப்பிணிப் பெண் கொலை
5. இம்பாலின் கோங்சாய் வெங்கில் கணவன் கண்முன்னே பெண் பாலியல் வன்கொடுமை
6. மேற்கு இம்பாலில் தாயும் மகனும் ஆம்புலன்சில் எரித்துக்கொலை
7. இம்பாலில் பெற்றோர் மற்றும் அவர்களின் இரண்டு மகள்கள் சுட்டுக்கொலை
8. கோகன் கிராமத்தில் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பெண் சுட்டுக்கொலை
9. லாம்ஃபெல் என்ற இடத்தில் வயதான பெண் சுட்டுக்கொலை
10. பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஒரு குடும்பமே எரித்துக்கொலை
முதியவர்கள், குழந்தைகளைகூட காவல்துறை, ராணுவத்தால் காப்பாற்றப்படவில்லை என்றும், ஒரு இன அழிப்பு போர் தந்திரமாக நடத்தப்படுவதாகவும் வேதனையுடன் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இணையச் சேவை முடக்கப்பட்டு, பல உண்மைகளை வெளிப்படுத்த அது தடையாக உள்ளதாகவும் இன்னும் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மணிப்பூரில் நெருக்கடி குறையாமல் இருக்க முதலமைச்சர் பிரேன் சிங் கூறும் பொய்களும் ஒரு காரணம் என அவர்கள் சாடியுள்ளனர். குக்கி இன மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் மூலம் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளனர். மேலும் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிப்படையாக விசாரணை நடத்த நம்பத்தகுந்த விசாரணை அமைப்புகளை தேவையெனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை உண்மைகளை வெளியிடுவோம் எனவும் மனித உரிமைகளுக்கான குக்கி மகளிர் அமைப்பு கூறியுள்ளது.
- ந.பால வெற்றிவேல்