”மான்-கி பாத்தில் வன்முறை குறித்து ஏன் பேசல?”-ரேடியோக்களை வீதியில் தீயிட்டு எரித்த மணிப்பூர் மக்கள்!

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மணிப்பூர் கலவரம் குறித்து பேசாததற்கு நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மணிப்பூர் போராட்டம், மோடி
மணிப்பூர் போராட்டம், மோடிtwitter page

கடந்த ஏப்ரல் மாதம் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், இன்னும் மோதல் வெடித்து வருகிறது. 45 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றும் வரும் இந்த மோதலில், சமீபகாலமாகப் பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்களுக்கு இடையே வன்முறை வெடித்து வருகிறது. இதில், பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள், அலுவலகங்கள் தீக்கிறையாக்கப்பட்டு வருகின்றன. இதன் வன்முறையால் மேலும் உயிர்ப்பலி எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெரும் பதற்றம் நிலவுவதால், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மணிப்பூரில் நிலவி வரும் மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், சூழலை கட்டுக்குள் கொண்டுவர பாஜக அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. மணிப்பூரில் வெடித்துள்ள மோதலுக்கு பாஜக அரசே காரணம் என அது குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதற்கிடையே மணிப்பூரைச் சேர்ந்த 10 அரசியல் கட்சிகள் டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோரை சந்தித்து மணிப்பூரில் உள்ள சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விளக்கியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோல், மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏக்களும் நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்குவதற்காக டெல்லி புறப்பட்டுச் சென்றதாகத் தகவல்கள் கூறின. ஆனால், மணிப்பூரின் வன்முறைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. குறிப்பாக, மணிப்பூர் வன்முறைகள் தொடரும் நிலையில் பிரதமர் மோடி கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

மணிப்பூரின் தொடர் வன்முறை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூட தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மணிப்பூர் பாஜக அரசை பதவி நீக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது. அரசியல் அமைப்பின் 356 பிரிவின்கீழ் மத்திய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும். அமித்ஷாவை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்புங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி, மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றியதற்கு அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் மணிப்பூர் மாநிலத்தில் பல இடங்களில் வீதிவீதியாக ரேடியோக்களை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தினர்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுவார். இதன்மூலம் நாட்டின் நிகழ்வுகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள், சாதனையாளர்கள் குறித்துப் பேசுவார்.

இந்த நிலையில், வரும் வாரம் வெளிநாட்டுச் சுற்றுலா பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதால் இந்த நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக் கிழமையே (ஜூன் 18) ஒலிபரப்பப்பட்டது. இதில் 45 நாட்களாகத் தொடரும் மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி, எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. மணிப்பூரில் அமைதி திரும்பவும் அவர், வேண்டுகோள் விடுக்கவில்லை. இதையடுத்து, மணிப்பூர் மக்கள், பல இடங்களில் ரேடியோக்களை உடைத்தும், தீயிட்டும் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”உங்கள் மன் கி பாத் உரையில், முதலில் மணிப்பூர் வன்முறையைச் சேர்த்திருக்க வேண்டும். மாநிலத்தின் தற்போதைய நிலைமை ஆபத்தானது மற்றும் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. உங்கள் அரசாங்கம் மணிப்பூரை அவ்வாறு கருதவில்லை போல் தெரிகிறது. மாநிலம் எரியும் போது உங்கள் அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது” எனப் பதிவிட்டிருந்தார்.

இதேபோன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம் ஆகியோரும் மணிப்பூரின் நிலைமை குறித்து பிரதமருக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவு இட்டுள்ளனர். அதுபோல் ஆர்.எஸ்.எஸ்ஸும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருப்பதுடன், அங்கு தீர்வு காண்பதற்கு நடவைக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளது.

முதல்வர் பைரேன் சிங் தலைமையில் நடைபெற்று வரும் பா.ஜ.க ஆட்சியில், இடஒதுக்கீடு தொடர்பாக மணிப்பூரில் ’குக்கி’ என்ற பழங்குடியினத்தவருக்கும், பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் ’மெய்டீஸ்’ என்ற பழங்குடியினர் அல்லாதவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com