\
Protests in Manipur
Protests in Manipur ANI

30 நிமிடங்கள் அதிர்ந்த மணிப்பூர்!பாத்திரங்கள் முதல் ஹாரன்கள்.. வெடித்த மக்கள் கோபம்!

அமைதியை மீட்டெடுக்க கோரி மணிப்பூரில் மக்கள் எழுச்சி!
Published on: 
Summary

மணிப்பூரில் 30 நிமிடங்கள் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பாத்திரங்கள், மேளங்கள், வாகன ஒலிப்பான்கள் மூலம் அரசுக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். ஐந்து மாவட்டங்களில் ஒரே நேரத்தில் நடந்த இந்த போராட்டம், நீடித்து வரும் வன்முறைகளுக்கு தீர்வு காண அரசை வலியுறுத்தியது.

செய்தியாளர் - M.மீரா

கடந்த 2023 மே மாதம் முதல் மணிப்பூரில்; நீடித்து வரும் இன மோதல்களுக்கு இன்னும் நிரந்தர தீர்வு காணப்படாத நிலையில் தொடர்ந்து வன்முறையும் போராட்டங்களும் நடந்து வருகிறது. இவ்வாறு தொடரும் வன்முறை, உயிரிழப்புகள் மற்றும் அமைதியை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பாத்திரங்களைத் தட்டியும், மேளங்களை அடித்தும், வாகனங்களின் ஒலிப்பான்களை ஒலிக்கச் செய்தும் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மணிப்பூரின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இந்தப் போராட்டம் ஒரே நேரத்தில் நடைபெற்றது. மாலை 7.30 மணி முதல் 8 மணி வரை சுமார் 30 நிமிடங்கள் மக்கள் பல்வேறு வழிகளில் ஒலி எழுப்பி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

போராட்டத்துக்கு ஃபெடரேஷன் ஆஃப் ஹவோமி அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளுக்கு வெளியே வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். பாத்திரங்களைத் தட்டுவது, மேளங்களை அடிப்பது, வாகனங்களின் ஒலிப்பான்கள் மற்றும் சைரன்களை ஒலிக்கச் செய்வது, சுத்தியலால் மின்கம்பங்களைத் தட்டுவது எனப் பல வழிகளில் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.

தலைநகர் இம்பாலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காங்லா கோட்டை இந்தப் போராட்டத்தின் முக்கிய மையமாக மாறியது. அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு, அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி ஊர்வலமாகச் சென்றனர்.

மேலும், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிதல், தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) அமல்படுத்துதல், ஆயுதக் குழுக்களுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை (SoO) ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் சாலையில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துப் பாதுகாப்பைப் பலப்படுத்தினர். போராட்டக்காரர்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி முன்னேறுவதைத் தடுக்க, காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

Protests in Manipur
”அரசியலமைப்புக்கு எதிரான வழிபாட்டுக் குழு” - ஆர்.எஸ்.எஸ். குறித்து ராகுல்காந்தி கடும் விமர்சனம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com