சத்தம் போட்ட ஊழியர்கள்.. தட்டிக் கேட்ட இசைக்கலைஞர்.. டெல்லியில் நேர்ந்த சோகம்!
டெல்லியில் மணிப்பூரைச் சேர்ந்த பிரபல கிட்டார் இசைக் கலைஞர் சாங்தாம் விக்ரம் சிங் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் வீட்டருகே இருந்த உணவக ஊழியர்கள் உரக்கச் சத்தமிட்டு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பிரச்னை முற்றியதாகக் கூறப்படுகிறது.
மணிப்பூரைச் சேர்ந்தவர் சாங்தாம் விக்ரம் சிங். பிரபல கிட்டார் இசைக்கலைஞரும் இசை ஆசிரியருமான இவர், தென்கிழக்கு டெல்லியின் கிலோக்ரி பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி விக்ரம் சிங் வீட்டின் அருகே இருந்த உணவக ஊழியர்கள் சிலர் உரக்கச் சத்தமிட்டு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதை விக்ரம் சிங் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாய் தகராறு முற்றவே, 8 பேர் கொண்ட கும்பல் அவரைத் துரத்திச் சென்று, அவரது குடியிருப்பு வளாகத்தின் 3-வது தளத்தில் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அவரை, அவரது மகன் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த டெல்லி காவல்துறை, 7 பேரைக் கைது செய்துள்ளதுடன், ஒரு சிறுவனையும் பிடித்துள்ளனர். இக்கொலைச் சம்பவத்திற்கு மணிப்பூர் முன்னாள் முதல்வர் மற்றும் வடகிழக்கு மாநில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டமும் நடத்தியுள்ளன. இந்தச் சம்பவம் டெல்லியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

