மணிப்பூர் | கடத்தப்பட்ட மெய்தி இன நபர்.. கெஞ்சியபோதும் சுட்டுக் கொலை.. வைரலாகும் வீடியோ!
மணிப்பூரின் வன்முறையால் பாதிக்கப்பட்ட சூரசந்த்பூர் மாவட்டத்தில் 38 வயது மெய்தி சமூகத்தைச் சேர்ந்த நபர் ஆயுதமேந்திய நபர்களால் கடத்தப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். மாநிலம் முழுவதும் உள்ள 351 நிவாரண முகாம்களில் 58,000 க்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் வசிக்கின்றனர். அண்டை மாநிலங்களில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது.
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அம்மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை. இதற்கிடையே, மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்து பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 3,000க்கும் மேற்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கிகள் மீட்கப்படாமல் இருப்பதால் மணிப்பூரில் அமைதி இன்னும் வெகுதொலைவில் உள்ளது.
இந்த நிலையில், சுராச்சந்த்பூர் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 38 வயது நபர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை நிகழ்வதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர் தனது உயிருக்கு மன்றாடுவதைக் காட்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இருட்டில் ஒரு கரடுமுரடான சாலையில் அமர்ந்திருக்கும் அந்த நபர், இரண்டு ஆயுதமேந்திய நபர்களிடம் கைகளைக் கட்டிக்கொண்டு மீண்டும் மீண்டும் மன்றாடுகிறார். அவர் முறையிட்ட போதிலும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அவரைச் சுட்டுக் கொல்கிறார். விசாரணையில் அவர், கக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்த மயங்கலம்பம் ரிஷிகாந்தா (38) என தெரிய வந்துள்ளது.
அவர், சூரசந்த்பூரைச் சேர்ந்த குக்கி இனப் பெண்ணை மணந்து, ஜின்மின்தாங் என்ற பழங்குடிப் பெயரைப் பெற்றிருந்தார். வேலையில் இருந்து அவர்கள் குறுகிய விடுப்பில் நேபாளத்திலிருந்து சூரசந்த்பூருக்குத் திரும்பியபோது கடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். செய்தி நிறுவனமான PTIஇன் படி, கடத்தல்காரர்கள் யுனைடெட் குக்கி தேசிய இராணுவத்தின் (UNKA) உறுப்பினர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது, இது மணிப்பூர் அரசாங்கத்திற்கும் பல குக்கி-சோ ஆயுதக் குழுக்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட செயல்பாடுகளை நிறுத்துதல் (SoO) ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத ஒரு போராளிக் குழுவாகும்.

